search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளி, சனி, ஞாயிறு விரதநாட்கள்: ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தம்
    X

    வெள்ளி, சனி, ஞாயிறு விரதநாட்கள்: ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தம்

    தீபாவளி பண்டிகை வியாபாரம் இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக அனைத்து தரப்பு வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை வியாபாரம் இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக அனைத்து தரப்பு வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

    ஜவுளி, நகை, பட்டாசு, இனிப்பு விற்பனையை தொடர்ந்து இறைச்சி விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை நாளில் வழக்கத்திற்கு மாறாக ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி விற்பனை பல மடங்கு அதிகமாக விற்பனையாகும். மட்டன், சிக்கன் விலை வழக்கத்தை விட அன்று அதிக விலையில் விற்பனை செய்யப்படும். ஆனால் இந்த தீபாவளி இறைச்சி விற்பனை தலை கீழாக மாறி விட்டது.

    தீபாவளி நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதால் பெருமாளை வழிபடக்கூடியவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்.

    சென்னையில் வசிக்க கூடியவர்கள் செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மாமிச உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இப்போது பெருமாளை வழிபடுவதால் சனிக்கிழமை விரதம் இருக்கிறார்கள். இதனால் தீபாவளி பண்டிகை இறைச்சி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) என்பதாலும் இறைச்சி விற்பனை அமோகமாக இருக்காது. எப்போதும் மிக குறைந்த அளவில் நடைபெறும்.

    தீபாவளிக்கு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை வருகிறது. அன்றைய தினம் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடமாட்டார் கள். மேலும் அன்றைய தினம் மகாவீர் ஜெயந்தி தினமும் கொண்டாடப்படுகிறது. அதனால் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. மொத்த மற்றும் சில்லறை இறைச்சி கடைகள் அனைத்தும் அன்று மூடப்படுவதால் இறைச்சி வியாபாரம் முழுவதும் பாதிக்கக்கூடும். பண்டிகை காலங்களில் அதிக விலை நிர்ணயம் செய்து அமோகமாக இறைச்சி விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு வழியில்லாமல் போய் விட்டது. இன்று முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் விரத நாட்களாக இருப்பதால் ஆடு, கோழிகள் கொள்முதல் செய்வதும் குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆட்டு இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி, இறைச்சி வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. 3 நாட்கள் விரதமாக கடை பிடிக்கப்படுவதால் எங்கள் தொழில் மோசம் அடைந்துள்ளது. வழக்கமாக தீபாவளி தினத்தில் 12 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படும். ஆனால் நாளை வெறும் 2000 ஆடுகள் மட்டுமே வெட்டுவதற்காக கொண்டு வந்துள்ளோம்.

    மகாவீர் ஜெயந்தி அன்று கடையை அடைக்க கூறுவதால் மொத்தமாக இறைச்சி விற்பனை பாதித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோழி இறைச்சி விற்பனையாளர் மண்ணடி உசேன் கூறியதாவது:-

    எனது கடையில் தீபாவளி தினத்தில் முதல் நாள் இரவு முதல் விற்பனை தொடங்கி விடும் 700 கிலோ வரை கோழிக்கறி விற்பனையாகும். கோழிக்கறி விலையும் 180 முதல் ரூ.200 வரை கூட விற்கப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு வியாபாரம் மோசமாக உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.140, ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம். ஆனால் வியாபாரம் இல்லை. புரட்டாசி மாதத்தில் விற்பனை மந்தமாக இருந்தது. தீபாவளியாவது கை கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த வியாபாரமும் பாதித்து விட்டது என்றார்.
    Next Story
    ×