search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி நாளில் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
    X

    தீபாவளி நாளில் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

    கியான்ட் புயல் காரணமாக தமிழகத்தில் தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான ‘கியான்ட்’ (முதலை) புயல் மியான்மர் நோக்கி சென்று திரும்பியது. தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 420 கி.மீ. தொலைவிலும் நெல்லூரில் இருந்து 550 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு இல்லை. பலவீனம் அடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வருகிறது.

    இந்த புயல் காரணமாக சென்னை உள்பட தமிழக கடலோர பகுதியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு உள்ளன.

    புயல் வலு இழந்து வருவதால் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களிலும் சென்னையிலும் லேசான மழை பெய்யும்.

    நாளை மறுநாளும் (தீபாவளி) அதற்கு அடுத்த நாளும் (29, 30-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் எனறு வானிலை அதிகாரியிடம் கேட்டதற்கு, பருவமழை மேலும் தள்ளிப்போகிறது. நவம்பர் முதல் வாரத்தில்தான் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 8 செ.மீ., சிவகிரியில் 4.செ.மீ., ஆயக்குடியில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
    Next Story
    ×