search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    34-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை: ஜெயலலிதாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்
    X

    34-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை: ஜெயலலிதாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்

    சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 34-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந் தேதி இரவு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டாலும், நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்காக ஜெயலலிதா அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது. அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, கடந்த மாதம் 30-ந் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்தார். அவரை தொடர்ந்து, டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் அடங்கிய டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் இம்மாதம் 5-ந் தேதி சென்னை வந்தனர்.

    இவர்கள் அளித்த சிகிச்சையின் பயனாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் சென்னை வந்து, சிகிச்சை மேற்கொண்டனர்.

    பிசியோதெரபி சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, 2 முறை லண்டன் சென்று வந்த டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து, மீண்டும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். எய்ம்ஸ் டாக்டர்களில் கில்நானி மட்டும் சென்னையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் நிலையை கவனிக்கிறார்.

    பிசியோதெரபி நிபுணர்களில் சீமா நாடு திரும்பிவிட்டார். மேரி சியாங் மட்டும் இங்குள்ள பிசியோதெரபி நிபுணர்களுடன் இணைந்து கொண்டு, ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றார். நேற்று லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர் கில்நானி மற்றும் பிசியோதெரபி நிபுணர்கள் அனைவருமே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றுடன் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 34 நாட்கள் ஆகிறது. நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக ஆந்திர மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.


    Next Story
    ×