search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தயார்: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
    X

    வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தயார்: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்

    வடகிழக்கு பருவ மழையை சமாளிக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்த்துறை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், முதன்மை செயலாளர் கே.சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜி.லதா, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் சி.என்.மகேஸ்வரன், துணை வருவாய் அதிகாரி கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி வடகிழக்கு பருவமழையை சமாளிப்பது குறித்து தெளிவான வரையரை 32 வருவாய் மாவட்டங்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. பருவமழை பெய்யும் காலத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அவர்கள் வழக்கமான பணிகளை தொடர அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தை சமாளிப்பதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன.

    ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 99 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகளும் முடிக்கப்பட்டு, பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும். இந்த பணிகளில் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும். பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த வெள்ள பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நீர் நிலைகளும் தூர்வாரப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான் நேரடியாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க நீச்சல் பயிற்சி வீரர்களும், பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்க தேவையான அளவு உணவு பொருட்களும் தயார்படுத்தப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட அளவில் 1070 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுக்கும், மாநில அளவில் 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருவாய்த்துறை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிக் காட்டுதலின்படி அனைத்து மாவட்டங்களிலும் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

    நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 498 மண்டலங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெள்ள காலத்தின் போது தங்க வைப்பதற்கான விடுதிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் 3,994 தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளான 712 இடங்கள் அடங்கும். சென்னையில் மட்டும் தாழ்வான பகுதிகள் 118 இடங்கள் ஆகும்.

    மாவட்டந்தோறும் வெள்ளப்பாதிப்புகளை கண்டறிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,499 மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 10 பேர் இருப்பார்கள். பருவமழை தொடர்பாக சென்னை மாவட்டத்திற்கான ஆய்வு கூட்டம் 26-ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×