search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு
    X

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு

    உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகத்தில் தடை உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிக் காலம் இன்றுடன் (24-ந்தேதி) முடிகிறது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 2 கட்டங்களாக நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    புதிய அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது.

    தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் இன்றுடன் முடிவதால் தனி அதிகாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

    எனவே, உள்ளாட்சி அமைப்பு பணிகளை தொய்வின்றி கவனிக்கும் வகையில், தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அவசர சட்டத்தை கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். இந்த அவசர சட்டம் இம்மாதம் 17–ந் தேதி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டம் 19–ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு யாரை–யாரை தனி அதிகாரிகளாக நியமிப்பது? அவர்களுக்கு என்னென்ன அதிகாரம் வழங்குவது? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவதால் தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

    அரசாணை வெளியானவுடன் தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட தொடங்கும். நாளை தனி அதிகாரிகள் பொறுப்பேற்க உள்ளனர்.

    மாநகராட்சிகளுக்கு மாநகராட்சி கமி‌ஷனரும், நகராட்சிகளுக்கு நகராட்சி கமி‌ஷனரும், பேரூராட்சிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்களும், ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர்களும் தனி அதிகாரிகளாக செயல்படுவார்கள்.

    ஏற்கனவே இந்த பொறுப்புகளில் அவர்கள் பணியாற்றினாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் இனி கூடுதல் அதிகாரத்துடன் செயல்படுவார்கள். காலியாக உள்ள இடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
    இந்த தனி அதிகாரிகள், உள்ளாட்சி தேர்தல் முடிந்து முதல் கவுன்சில் கூட்டம் கூடும் வரையிலோ, அல்லது டிசம்பர் மாதம் 31–ந் தேதி வரையிலோ அந்த பொறுப்பில் இருப்பார்கள்.
    Next Story
    ×