search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
    X

    விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு

    அங்கீகாரம் இல்லாமல் வீட்டுமனைகளாக மாற்றப்பட்ட விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கமுடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், ‘தமிழகத்தில் விவசாய நிலங்களை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க அதுபோன்ற நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை தடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விளைநிலங்களை அங்கீகாரமற்ற வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடைவிதித்து செப்டம்பர் 9-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த தடையை நீக்கக்கோரி பல ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இடைக்கால தடையினால், பத்திரப்பதிவு ஸ்தம்பித்து விட்டதாகவும், எனவே இந்த தடையை உடனே நீக்கவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

    அதேபோல, வி.பி.ஆர். மேனன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றும்போது ஒருங்கிணைந்த விரிவான ஒற்றைச்சாளர கொள்கை திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவினால், ஏற்கனவே பதிவு செய்த மனையிடங்களையும், அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசு கடந்த 20-ந் தேதி ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை இனி பத்திரப்பதிவு செய்யக்கூடாது. ஆனால் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது’ என்று கூறினார்.

    ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘தடை உத்தரவினால், ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கோடிக்கணக்கான பணத்தை முதலீடுகள் செய்தவர்களுக்கு பாதிப்பு என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? கடத்தல் தொழில் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும். அதற்காக கடத்தல் தொழிலை அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அப்போது மனுதாரர் குறுக்கிட்டு, ‘தற்போது பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினால், விவசாய நிலங்கள் அனைத்தும் பாழாகிவிடும்’ என்றார்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கடந்த 20-ந் தேதி பிறப்பித்துள்ள அரசாணையின் உட்பிரிவு 2-ல், ‘அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பதிவு செய்வதை தடைசெய்கிறது. ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு அந்த பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

    நாங்கள் விவசாய நிலங்களை மட்டும்தான் வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என உத்தரவிட்டோம். இந்த உத்தரவினால் அனைத்து பத்திரப்பதிவும் ஸ்தம்பித்துப் போய்விட்டதாக கூறுவதை எங்களால் ஏற்க முடியவில்லை. நாங்கள் ஒட்டுமொத்த பத்திரப்பதிவிற்கும் தடை விதிக்கவில்லை.

    அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய மட்டுமே தடைவிதித்துள்ளோம். இந்த தடையினால் பெரும் பாதிப்பு என்றால் விவசாய நிலங்களை தான் வீட்டு மனைகளாக இவர்கள் மாற்றுகின்றனரா? என்பதை முதலில் விளக்கவேண்டும்.

    தமிழகத்தில் எந்தெந்த நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க முடியும். இந்த வழக்கை நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×