search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகுமார்
    X
    சசிகுமார்

    இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்: டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவு

    கோவையில் பதட்டத்தை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    சசிகுமாருக்கு ஏற்கனவே மிரட்டல் இருந்து வந்தது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் போராட்டம், கூட்டங்கள் என அனைத்து நிகழ்வுகளையும் பேஸ்புக்கில் பதிவு செய்து வந்தார். அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது கோவையில் பதட்டத்தை ஏற்படுத்தியது. சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. போலீஸ் ஜீப் உள்பட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி கோவை விரைந்து வந்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சசிகுமார் கொலையில் துப்பு துலக்குவதற்காக டி.ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். கோவை ஜெயிலில் கடந்த 13-ந்தேதி ஒரு கைதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்து பேசப்பட்ட அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தினர்.

    சசிகுமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், சம்பவத்தன்று அவர் மொபட்டில் சென்ற சாலையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை சேகரித்தும் விசாரணை நடத்தினர். எனினும் கொலை நடந்து ஒரு வாரமாகியும் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் துடியலூர் போலீசார் கைப்பற்றிய செல்போன்கள் உள்பட அனைத்தையும் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    Next Story
    ×