search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
    X

    ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

    ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். தமிழக மக்களும் இதையே விரும்புகின்றனர்.

    இத்தகைய சூழலில் முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    காவல்துறை தலையிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த பிறகு தான் பல இடங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

    தீப ஒளி திருநாளுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இத்தகைய வதந்திகளும், பதற்றமும் தொடர்ந்தால் அது வணிகத்தையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மிகக்கடுமையாக பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டிய பெருங்கடமை தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இருக்கிறது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி விட்டதாகவும், அவர் வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளனர். இந்த விளக்கம் ஏற்கத்தக்கதாகும்.

    நிர்வாகப்பணிகளின் அடிப்படையில் பார்த்தால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே தகவல் தொழில்நுட்பத் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த புதிய திட்டங்களை முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். உடல் நலம் தேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும், ஆளுநர் வித்யாசாகர் ராவும் எழுதிய கடிதங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 மணி நேரத்தில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 919 வேட்பாளர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 655 பேர் என 1574 வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் தேர்வு செய்து அறிவிக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    இவற்றை வைத்துப் பார்க்கும்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலம் பெற்று விட்டார் என்பதுடன், தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. கட்சிப் பணிகளையும் கவனிக்கத் தொடங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனால், இதை மக்களுக்கு புரியவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் முதல்வரின் உடல்நிலை குறித்து வி‌ஷமிகள் வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பாக அமைகிறது. முதல்-அமைச்சரின் உடல்நிலை குறித்து அவரே வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×