search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே கார் மோதி 19 ஆடுகள் பலி: டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
    X

    அறந்தாங்கி அருகே கார் மோதி 19 ஆடுகள் பலி: டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

    அறந்தாங்கி அருகே அதிவேகமாக வந்த கார்மோதியதில் 19 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோங்குடி ஊராட்சி காஞ்சி ராயன்வயலை சேர்ந்தவர்கள் முத்து, ஆறுமுகம், உடையப்பன், சரஸ்வதி,வெள்ளைச்சாமி ஆகியோர் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று அவர்கள் தங்களது வெள்ளாடுகளை பச்சலூர் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.

    மேய்ச்சல் முடிந்து அவர்கள் ஆடுகளை வீட்டில் உள்ள பட்டியில் அடைப்பதற்காக அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் ஓட்டிவந்தனர். ஆடுகள் கரையப்பட்டி பிரிவு சாலை அருகே வரும்போது காரைக்குடி பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று காஞ்சிராயன்வயலை சேர்ந்தவர்கள் ஓட்டிவந்த வெள்ளாடுகள் மீது மோதியது. இதில் முத்துவிற்கு சொந்தமான 8 ஆடுகள், ஆறுமுகத்திற்கு சொந்தமான 6 ஆடுகள், உடையப்பனுக்கு சொந்தமான 6 ஆடுகள், சரஸ்வதி, வெள்ளைச்சாமி ஆகியோருக்கு சொந்தமான தலா 1 ஆடுகள் என மொத்தம் 19 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 3 ஆடுகள் படுகாயம் அடைந்தன. ஆடுகள் மீது மோதிய சொகுசு கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    கார்மோதி ஆடுகள் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் குவிந்தனர். மேலும் அவர்கள் ஆடுகள் மீது மோதிய காரின் ஓட்டுனரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×