search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ராம்குமார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    ராம்குமார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது.
    சென்னை:

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது:-

    புழல் சிறையில் ராம்குமார் மின்சாரம் பாய்ச்சப்பட்டு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    சுவாதி படுகொலையில் உண்மையான குற்றவாளி யார் என்பது குறித்த மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை தன்மையை வெளிகொண்டு வர வேண்டும்.

    தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ராம்குமார் வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷியம், ராயபுரம் மனோ, சிரஞ்சீவி, அஸ்லாம்பாஷா, கே.ஆர்.ராமசாமி, ஹீசினா சையத், ஜான்சிராணி, புத்தநேசன், வேளச்சேரி செல்வம், கோல்டன் ரபிக், கவுன்சிலர் தமிழ்செல்வன், எம்.பி.ரஞ்சன்குமார், ராணி ராஜேந்திரன், கீதா, திரவியம், அரும்பாக்கம் வீரபாண்டியன், கந்தராஜ், ஆர்.கே.நகர் சையத் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×