search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தல்
    X

    உள்ளாட்சி தேர்தலில் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தல்

    உள்ளாட்சி தேர்தலில் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    யாதவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக சட்டசபையில் பதிவு செய்த முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியனுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் முகப்பேரில் பாராட்டு விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோ பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் எஸ்.நாகலிங்கம், கூடுதல் பொதுச்செயலாளர் என்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மலேசியா பாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

    * தமிழ்நாட்டில் ஆடு மேய்க்கும் தொழிலில் யாதவர்களே பெருமளவில் ஈடுபட்டுள்ளதால் ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்திடவும், யாதவ சமுதாயத்தை சார்ந்த ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

    உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மதுரை யாதவர் கல்லூரியின் நிர்வாகம் தற்காலிகமாக சில ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கல்லூரி நிர்வாகத்தை மதுரை யாதவர் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    * வனத்துறை காடுகளில் செம்மறி ஆடு மேய்ச்சலுக்கு ஏற்கனவே வழங்கிய இலவச அனுமதி சீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும்.

    * ஆடு வளர்ப்போருக்கு மானிய விலையில் வலை, கம்பி, தார்பாய் அரசு வழங்க வேண்டும்.

    * உள்ளாட்சி தேர்தலில் மேயர், உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 3-வது பெரும்பான்மை சமுதாயமான யாதவ சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை தந்து அரசியல் கட்சிகள் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறியது.

    கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர் எம்.கோபால கிருஷ்ணன், எஸ்.திருநாகலிங்கம், குருந்தலிங்கம், கே.கே.பாலகிருஷ்ணன், டாக்டர் காந்தய்யா, ஜவகர், அடைக்கலம் யாதவ், ஆற்காடு, ரங்கபூபதி பேரா. கபிலன், ஏ.எம்.செல்வாஜ், சபாபதி, முனியாண்டி, கே.கே.நகர் கே.ஜோதிலிங்கம் யாதவ், பாரிராஜன் பேசினார்கள். முடிவில் பொருளாளர் கே.எத்திராஜ் யாதவ் நன்றி கூறினார்.
    Next Story
    ×