search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்
    X

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. முதலாவதாக 2 ஆயிரம் கார்கள் கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றன.
    சென்னை:

    சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்து இதுவரை, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், நிலக்கரி, மற்றும் கார்கள் போன்றவை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மட்டுமே நடைபெற்று வந்தது. கப்பல் போக்குவரத்தின் பங்கை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு காமராஜர் துறைமுகத்திற்கு உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி, காமராஜர் துறைமுகத்தில் இருந்து முதலாவதாக கார்கள் கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகம் மற்றும் குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதம் 2 முறை இந்த உள்நாட்டு போக்குவரத்து நடைபெறும்.

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு செல்வதற்கு 2 நாட்களும், கொச்சி துறைமுகத்தில் இருந்து கண்ட்லா துறைமுகத்திற்கு செல்வதற்கு 4 நாட்களும் ஆகும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த உள்நாட்டு கப்பல் போக்குவரத்துக்காக ‘எம்.வி.ட்ரெஸ்டென்’ கப்பலில் ஹூண்டாய், ரெனால்ட், போர்டு கம்பெனிகளின் 2 ஆயிரம் கார்களை ஏற்றும் பணி நேற்று இரவு தொடங்கியது. இந்த பணியை காமராஜர் துறைமுகத்தின் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார். அப்போது பொது மேலாளர்(செயல்பாடு) வி.கிருஷ்ணசாமி, துணை பொதுமேலாளர் பி.ராதாகிருஷ்ணன்(சிவில்), தலைமை மேலாளர்(போக்குவரத்து) ஏ.கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கப்பலில் கார்களை ஏற்றும் பணி முடிவடைந்து, இன்று (சனிக்கிழமை) ‘எம்.வி.ட்ரெஸ்டென்’ கப்பல் முதல் உள்நாட்டு போக்குவரத்தை தொடங்குகிறது.

    இந்த கப்பலில், கார்களை ஏற்றிச் செல்வதற்கு கப்பல் நிறுத்தும் கட்டணமாக ரூ.10 லட்சமும், கப்பல் கட்டணமாக ரூ.13 லட்சமும், கார்களுக்கான தளமேடைக்காக 1,600 குதிரைத்திறன் கொண்ட கார் ஒன்றுக்கு ரூ.500-ம், அதைவிட அதிகமான குதிரைத்திறன் கொண்ட கார் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும், கனரக வாகனம் ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

    Next Story
    ×