search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்
    X
    கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்

    கோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் படுகொலை: 14 பஸ்கள் உடைப்பு

    கோவை அருகே இந்து முன்னணி பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 35). இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்தார்.

    இவர் நேற்று நிர்வாகிகளை சந்தித்து விட்டு இரவு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    இரவு 11 மணி அளவில் சுப்பிரமணியபாளையம் ரோடு ரத்தினவிநாயகர் கோவில் அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியது.

    அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அலறியபடி கிடந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.

    தகவல் அறிந்து இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதாவினர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சசிகுமார் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கொலை செய்யப்பட்ட சசிகுமார் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்து முன்னணி இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார். நகர தலைவர், செயலாளர், மாவட்ட செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் கடந்த 7 வருடங்களாக மாவட்ட செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

    இந்து முன்னணி சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் பேஸ்புக்கில் பதிவிடுவார். கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு கோவை மாநகர பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் இவர் உள்பட 4 பேரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் வந்திருந்தது. அப்போது சசிகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் பாதுகாப்பு விலக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்த சில பதிவுகள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களாக யாரோ சிலர் தன்னை பின் தொடர்வதாக நண்பர்களிடம் கூறி வந்த நிலையில் தான் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலை நடந்த சாலையின் இருபுறமும் உள்ள வணிக வளாகங்கள் முன்பிருந்த கண்காணிப்பு காமிராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சசிகுமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை பட்டியலிட்டு விசாரித்து வருகின்றனர். இதில் நேற்று சசிகுமாருடன் யாரோ ஒருவர் நீண்ட நேரமாக உரையாடியதும், வாட்ஸ்அப்பில் ஒரு குறிப்பிட்ட எண்ணுடன் அதிக பதிவில் இருந்ததும் தெரிய வந்தது. அதன்பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 14 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீதும் கல் வீசினர். இதில் 2 பஸ்களின் கண்ணாடியும் உடைந்தது.

    உப்பிலிபாளையம் அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்குள் நிறுத்தப்பட்டு இருந்த பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இதில் 3 பஸ்களின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று காலை ஒரு அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. இதேபோல் நேற்று இரவு கோவையில் இருந்து கரூர் சென்ற அரசு பஸ் மீது ரேஸ்கோர்ஸ் பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்டது.

    சரவணம் பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் இன்று காலை ஒரு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் ரோட்டில் கோவில் வழி என்ற பகுதியில் ஒரு அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. திருப்பூர் பி.என். ரோட்டில் ஒரு அரசு பஸ், ஒரு தனியார் மினி பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    ஊத்துக்குளி ரோட்டில் 2 பஸ்கள், ஒரு லாரி மீது கல்வீசி உடைத்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த 2 பேக்கரிகளையும் கல்வீசி உடைத்தனர்.

    பல்லடம் கிளைக்கு சொந்தமான பஸ் கோவை- திருப்பூர் ரோடு ராயர்பாளையம் பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்டது.

    சத்தியமங்கலத்திலிருந்து கோவை சென்ற ஒரு தனியார் பஸ் மீது திடீரென கல் வீசப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி நொறுங்கி சேதம் அடைந்தது. பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×