search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் நாளை இறுதி தீர்ப்பு: 3-வது நீதிபதியாக கிருபாகரன் நியமனம்
    X

    ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் நாளை இறுதி தீர்ப்பு: 3-வது நீதிபதியாக கிருபாகரன் நியமனம்

    ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் 3-வது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி கிருபாகரன் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னரே ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலையில் கைதான ராம்குமார் கடந்த 18-ந்தேதி புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

    ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ராம்குமாரின் தந்தை பரமசிவம் சார்பில் கடந்த 19-ந்தேதி அன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சிவஞானம் பிரேத பரிசோதனை குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் குழுவுடன் 4-வதாக டாக்டர் பாலசுப்ரமணியன் என்பவரை நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று நேற்று மாலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    நீதிபதி வைத்தியநாதன் கூறும்போது, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஏற்கனவே 4 டாக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், 5-வதாக தனியார் டாக்டரை நியமிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார். இன்னொரு நீதிபதியான ஹூலுவாடி ஜி.ரமேஷ் கூறும்போது, ராம்குமார் சிறையில் இறந்ததாலேயே மனுதாரர் தரப்பில் ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என தெரிவித்தார்.

    இப்படி 2 நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தினை கொண்டிருந்ததால் இந்த வழக்கு விசாரணையை தனியாக 3-வது நீதிபதியின் விசாரணைக்கு விட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் எங்கள் இருவருக்கும் இந்த வி‌ஷயத்தில் மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு ஐகோர்ட்டு பதிவு துறைக்கு உத்தரவிடுவதாகவும் கூறினர்.

    3-வது நீதிபதி இறுதி தீர்ப்பு அளிக்கும் வரையில் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இன்று காலையில் தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன்கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் வழக்கு விசாரணையை தொடங்கினர். அப்போது ராம்குமாரின் தந்தை பரமசிவம் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் 3-வது நீதிபதி விசாரணைக்கு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். ஆனால் இதுவரையில் 3-வது நீதிபதி நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன்கவுல் 3-வது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தனியார் டாக்டர் ஒருவர் இடம் பெறுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்றே நடைபெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    நாளை காலை நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கு விசாரணையை நடத்துகிறார். அப்போது ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரத்தில் தனியார் டாக்டரை நியமிப்பதை குறித்து முடிவெடுத்து இறுதி தீர்ப்பு அளிக்கும். அவர் புதிய உத்தரவை பிறப்பிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி கிருபாகரன் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னரே ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந்தேதி ராம்குமார் உடல் வைக்கப்பட்ட நாளில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி முன்பு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பிரேத பரிசோதனை கூடம் அருகில் உள்ள வாசல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×