search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் சி.பி.ஐ.அதிகாரிபோல் நடித்து காரை கடத்தி சென்ற வாலிபர் கைது
    X

    விழுப்புரத்தில் சி.பி.ஐ.அதிகாரிபோல் நடித்து காரை கடத்தி சென்ற வாலிபர் கைது

    விழுப்புரத்தில் சி.பி.ஐ.அதிகாரிபோல் நடித்து காரை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னை அருகே உள்ள பாடிபகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

    வேளச்சேரி பகுதி கார் ஸ்டேண்டில் பயணிகள் வருகைக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் நான் சி.பி.ஐ.அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வழக்கு சம்பந்தமாக கோவை செல்ல வேண்டும் என கூறினார்.

    உடனே செந்தில்குமார் அந்த வாலிபரை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். விழுப்புரம் புறவழிச்சாலை அருகே வந்தபோது அந்த வாலிபர் சாப்பிட வேண்டும் விழுப்புரம் பஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினார்.

    விழுப்புரம் பஸ் நிலையத்துக்கு செந்தில்குமார் காரை ஓட்டிவந்தார். அப்போது அவரிடம் கடைக்கு சென்று சிகரெட் வாங்கிவருமாறு சொன்னார். உடனே அவர் காரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அந்த வாலிபர் கண்இமைக்கும் நேரத்தில் திடீரென்று காரை கடத்தி சென்றார்.

    இதுகுறித்து செந்தில் குமார் விழுப்புரம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விழுப்புரத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் விழுப்புரம் குயிலாப்பாளையம் சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த நிற்காமல் சென்றது. போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர்.

    அந்தகாரை ஓட்டிவந்தவர் குயிலாப்பாளையம் கார் ஸ்டேண்டில் காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் தள்ளிச்சென்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தபோலீசார் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னை குரோம்பேட்டை எம்.சி.நகரை சேர்ந்த சங்கர் என்பதும் இவர் செந்தில் குமாரின் காரை கடத்தி வந்ததும் தெரியவந்தது. காரை மீட்டு செந்தில் குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×