search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமார் தற்கொலை: புழல் சிறையில் பெண் நீதிபதி விசாரணை
    X

    ராம்குமார் தற்கொலை: புழல் சிறையில் பெண் நீதிபதி விசாரணை

    ராம்குமாரின் தற்கொலை குறித்து புழல் சிறையில் திருவள்ளூர் பெண் நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணை நடத்தினார்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவர் சுவாதி மீது கொண்ட ஒருதலை காதல் காரணமாக அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    சொந்த ஊரில் போலீசில் சிக்கியதும் ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்துக் கொண்ட ராம்குமார் ஜூலை 5-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த 74 நாட்களாக சிறையில் இருந்த ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ராம்குமார் பல்வேறு தகவல்களை கூறி இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், குற்றவாளி அல்ல என்றும், இந்த வழக்கில் யாரையோ தப்பிக்க வைப்பதற்கு ராம்குமார் பலிகடாவாக்கப்பட்டு விட்டார் என்றும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் குற்றம் சுமத்தினர். ஆனால் போலீஸ் தரப்பிலோ இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    சுவாதி கொலையில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கை விரைந்து முடித்து அவருக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்போம் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூறி வந்தனர்.

    இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணிகளையும் போலீசார் முடுக்கி விட்டிருந்தனர். இன்று அல்லது நாளை இதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    இதனால் சுவாதி கொலை வழக்கில் விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

    இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கில் திடுக்கிட வைக்கும் திருப்பமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மாலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை 4.30 மணி அளவில் விசாரணை கைதிகள் பிளாக்கில் இருந்தவர்கள் சாப்பாட்டுக்காக வெளியில் வந்தனர். அவர்களுடன் ராம்குமாரும் சாப்பிடுவதற்காக சிறை அறையில் இருந்து வெளியில் வந்தார். அப்போது திடீரென அங்கிருந்த மின்சார பெட்டியை உடைத்து வயரை பிடுங்கி வாயில் வைத்து கடித்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைதுறை அதிகாரிகள் உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ராம்குமாரை தூக்கிச் சென்றனர். பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ராம்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று இரவு ராம்குமாரின் உறவினர்கள், வக்கீல்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

    இன்று காலையிலும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ராம்குமாரின் தற்கொலை குறித்து திருவள்ளூர் பெண் நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணை நடத்தினார். காலை 9 மணி அளவில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர், பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் ராம்குமாரின் உடலில் காயங்களும் உள்ளன.

    வலது பக்க கழுத்து, இடது மார்பு உள்ளிட்ட 3 இடங்களில் காயங்கள் உள்ளன. இதனையும் நீதிபதி தமிழ்செல்வி பார்த்தார். 1½ மணி நேரம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்திய அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புழல் சிறைக்கு சென்றார்.

    அங்கு சிறை துறை அதிகாரிகளிடமும் நீதிபதி தமிழ்செல்வி விசாரணை நடத்தினார். சிறையில், ராம்குமார் மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்ட இடத்தையும் பார்வையிட்டார்.

    ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டது எப்படி? என்பது பற்றி அப்போது அவர் கேட்டறிந்தார்.

    ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பதட்டம் நிலவுவதால் இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரும் ஆஸ்பத்திரியின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகிலேயே பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. அந்த பகுதிக்கு யாரும் சென்று விடாதபடி ஆஸ்பத்திரி வாசலின் இரும்புக்கதவு இழுத்து உள் பக்கமாக பூட்டப்பட்டது.

    இன்று காலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆஸ்பத்திரிக்கு சென்று ராம்குமாரின் உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.

    இதற்கு ஜான்பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர் கூறும்போது, “ராம்குமாரின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலக வேண்டும் என்றால், நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே ராம்குமாரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதுவரை பிரேத பரிசோதனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று காலையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பிற்பகலில் ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு பின்னரே ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும்.

    பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர்கள் மனோகரன், அன்பு ஆகியோர் ஆஸ்பத்திரியிலேயே முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே அவரது குடும்பத்தினர், ராம்குமார் அப்பாவி என்றும், அவரை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டனர் என்றும், தொடர்ந்து கூறி வந்தனர்.

    இந்நிலையில், ஏற்கனவே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் தற்போது, புழல் சிறையிலேயே, மின்வயரை கடித்து தற்கொலை செய்திருக்கும் சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ராம்குமாரின் தற்கொலை மூலம் சுவாதி கொலை வழக்கு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
    Next Story
    ×