search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை
    X

    சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை

    சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மின்சார வயரை கடித்ததால் தூக்கி வீசப்பட்டு அவர் உயிர் இழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி (வயது 24).

    செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஜூன் 24-ந் தேதி காலை 6.45 மணிக்கு மின்சார ரெயில் மூலம் அலுவலகத்துக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    அவரை கொலை செய்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த பயங்கர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கொலையாளி சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி இருந்ததும், சுவாதி கொலைக்கு பின்னர் அவர் மாயமாகி விட்டதும் தெரியவந்தது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்து மீனாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ராம் குமார் (24) என்பவரை ஜூலை 1-ந் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். அப்போது ராம் குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை போலீசார் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த பின், சென்னை கொண்டு வந்தனர்.

    கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதியை ராம்குமார் காதலித்து வந்ததாகவும், அவரது காதலை சுவாதி ஏற்க மறுத்ததால் ராம் குமார் அவரை வெட்டி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினார்கள். கோர்ட்டு உத்தரவின் பேரில் ராம்குமார் சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக் கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், ராம்குமார் நேற்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று மாலை 4.45 மணி அளவில் சாப்பாட்டுக்காக கைதிகள் அறைகளில் இருந்து வெளியே வந்தனர். அப்போது தனது அறையில் இருந்து வெளியே வந்த ராம்குமார் திடீரென்று அருகில் உள்ள மின்சார பெட்டியை உடைத்து, அதில் உள்ள வயரை பிடுங்கி அதை பல்லால் கடித்தார். இதனால் மின்சாரம் பாய்ந்ததால் ராம்குமார் தூக்கி வீசப்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து மற்ற கைதிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ராம்குமாரை மின்சாரம் தாக்கியதால் அருகில் செல்ல அவர்கள் பயந்தனர்.

    உடனே சிறை காவலர்கள் ராம்குமாரை சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராம்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    5.45 மணி அளவில் ராம் குமாரின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த தகவலை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் கிடைத்ததும் சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இந்த தற்கொலை சம்பவம் பற்றி தமிழக அரசு மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

    Next Story
    ×