search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையில் தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய கன்னட நடிகர்கள் மீது வழக்கு
    X

    காவிரி பிரச்சினையில் தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய கன்னட நடிகர்கள் மீது வழக்கு

    காவிரி பிரச்சினையில் தேச ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக கன்னட நடிகர்கள் 3 பேர் மீது கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை கணபதி மணியகாரம்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் வீதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தமிழ் தேசிய பேரமைப்பு தலைவராக உள்ளார். கோவை 2-ம் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இளங்கோவன் தனி நபர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார்(வயது 41), மற்றும் கன்னட நடிகர்கள் உபேந்திரா என்ற உப்பி(47), தர்ஷன் தூகுதீபா(39) ஆகிய 3 பேரும் பேசினார்கள்.

    காவிரி பிரச்சினையில் அரசாங்கம் எப்போதுமே தமிழகத்துக்கு தான் தண்ணீர் கொடுக்கிறது. நாம் சும்மாவே இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் போவது போய் கொண்டே தான் இருக்கும். உச்ச நீதிமன்றம் சொல்வது சரி. ஆனால் இங்கே குடிக்கவே தண்ணீர் இல்லை. அங்கே விவசாயத்துக்கு கேட்கிறார்கள். எப்படி தர முடியும்?. இந்த முறை விடமாட்டோம். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்' என்று அவர்கள் 3 பேரும் கன்னடத்தில் பேசினர்.

    இவர்களின் பேச்சு போராட்டக்காரர்களை கலவரம் செய்ய தூண்டி வன்முறை ஏற்பட வழிவகுத்தது. இவர்களின் பேச்சு இந்திய தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் மற்றும் கேடு விளைவிக்கும் செய்கை ஆகும். தமிழ் மற்றும் கன்னட மொழி பேசும் மக்களிடையே வெறுப்பையும், பகையையும் வளர்க்கும் முயற்சியாகும். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் கலகம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக லாரிகள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

    எனவே கன்னட நடிகர்கள் 3 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 124(ஏ)(தேச ஒற்றுமைக்கு விரோதமாக பேசுதல்), 153(கலகத்தை விளைவிக்கும் நோக்கத்தில் பேசுதல்), 153(ஏ)(மொழி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துதல்), 153(பி)(தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த மனுவை ஏற்று 3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், அந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 3-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மனுதாரர் வக்கீல் கூறுகையில், 'இளங்கோவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்துள்ளார். அப்போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? என்பது தெரியவரும். மனுவில் கூறப்பட்டுள்ள புகார்களுக்கான வீடியோ பதிவுகளின் ஆதாரத்தை மனுவுடன் இணைத்து கொடுத்துள்ளோம்' என்றார்.
    Next Story
    ×