search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதா?: ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி
    X

    சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதா?: ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி

    சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார். சிறுமியை பொது இடத்தில் அசிங்கமாக கேலி செய்ததாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபுகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘16 வயது சிறுமியும், மனுதாரர் பிரபுகுமாரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இது அவர் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு’ என்று வாதிட்டார்.

    போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிறுமியும், அவரது தாயாரும் ரோட்டில் நடந்துச் சென்றபோது, அந்த சிறுமியை பார்த்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா... ஓடி போயி கல்யாணத்தான் கட்டிக்கலாமா?’ என்று பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார். இதை தட்டிக்கேட்ட அவர்களை தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’ என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் சினிமா பாட்டு மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. அவர் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் சிறையில் உள்ளார். அதனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை. அதனால், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்குகிறேன்.

    ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை கீழ் கோர்ட்டில் கொடுத்து அவர் ஜாமின் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அவர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலையிலும், மாலையிலும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திடவேண்டும்.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதால், இந்த வழக்கை போலீசார் விரைவாக விசாரித்து முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.

    இந்த சூழ்நிலையில், திரைப்படத்துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன். இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும். அதற்கு பதிலாக, திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெற செய்வது. வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால், நம்முடைய உயர்ந்த கலாச்சாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர்.

    திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போது அவர்களுக்கு மறக்காது. எனவே, திரையுலகத்தினர் எப்போது தன்னுடைய சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.

    எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும். இதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வரவேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
    Next Story
    ×