search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நிதி நிலை அறிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்
    X

    மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நிதி நிலை அறிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

    முதல்வர் ஜெயலலிதா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஒரு நிதிநிலை அறிக்கையை தந்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பங்கேற்று பேசியதாவது:-

    உலக அளவில் பொருளாதார மந்த சூழ்நிலையில் தமிழக மக்கள் பாதிக்காத வண்ணம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு நிதிநிலை அறிக்கையை தந்துள்ளார்.

    கடந்த 6 ஆண்டுகளாக இதேபோன்ற வரி இல்லாத நிதிநிலை அறிக்கையையே அவர் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் இது போன்றதொரு நிதிநிலை அறிக்கை இல்லை.

    தமிழக மக்களின் நலத் திட்டங்களுக்காகவும், மானியத்திற்காகவும் ரூ.68 ஆயிரத்து 211 கோடியாகும். கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்காக மட்டும் 23 ஆயிரத்து 583 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது 2016-2017 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 6 ஆயிரத்து 941 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் அம்மா நீர் மேலாண்மை, வறுமை ஒழிப்பு, தொழில்திறன் மேம்பாடு, ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு போன்ற 5 திட்டங்கள் மூலம் 11 வளர்ச்சித்திட்டங்களை முன்னிறுத்தியுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பசுமை வீடுகள், இந்திரா குடியிருப்பு திட்டங்கள் மூலம் 8 லட்சத்து, 41 ஆயிரத்து 637 பேருக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. தற்போது 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தர ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் தொடர உள்ளாட்சித் தேர்தலில் நாம் நூறு சதவீத வெற்றியை பெற உழைக்கவேண்டும் என்றார்.

    கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலரும் வடக்கு சட்டபேரவை உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

    தமிழகத்தை ஒளிமயமாக உருவாக்க கூடிய தொலைநோக்கு சிந்தனையோடு எண்ணற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தக்கூடிய ஒரே தலைவராக அம்மா திகழ்கிறார். உலகத்திலேயே முன் மாதிரியாக செயல்படுகிறார்.

    அம்மாவால் கொண்டு வரப்படும் திட்டங்களை பிற மாநில முதலமைச்சர்கள் அவரவர் மாநில மக்களுக்கு செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் முடியவில்லை. நிதிநிலை பற்றாக்குறையாக இருந்த போதிலும் தமிழக மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதில் தனக்கு நிகர் யாருமில்லை என்ற சரித்திர சாதனையாக அம்மா திகழ்கிறார்.

    வருகின்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், இணைச்செயலாளர் சுமதிமதி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தர்மராஜா, சுகாதாரகுழு தலைவர் எஸ்.முனியாண்டி, ஒன்றிய செயலர்கள் ராம கிருஷ்ணன், வீரமணி, முன்னாள் தொகுதி செயலர் பாரி, பகுதி செயலர் பன்னீர்செல்வம், வார்டு செயலர் பொன்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×