search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதார பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் கண்காணிக்க உத்தரவு
    X

    சுகாதார பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் கண்காணிக்க உத்தரவு

    துப்புரவு மற்றும் சுகாதார பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் கண்காணிக்க வேண்டும் என்று மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது முதல் பல்வேறு முன்மாதிரி செயல்பாடுகளை மாநகராட்சி முன்னெடுத்து செல்கிறது.

    நகரில் எந்த பகுதியிலும் குப்பைகள் தேங்கக்கூடாது, வீதிகளில் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும், சாலைகள் பராமரிப்பு பணி, மழை வடிகால், சுகாதார பணிகள், தெருவிளக்கு, தூர்வாரும் பணிகள் போன்றவற்றை விரைவாக செய்ய மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் பி.சந்திரமோகன் ஆகியோர் அதிகாரிகளுக்கு அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினர்.

    மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் எந்த இடத்திலும் சாலையில் குப்பைகள் இருக்க கூடாது, கட்டிட கழிவுகள் இருக்க கூடாது, அவற்றை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னையில் உள்ள 33 ஆயிரம் சாலைகள், பஸ் போக்குவரத்து உள்ள 471 சாலைகளில் தூய்மையாக இருக்க தேவையான அனைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் இந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை நேரில் சென்று மாநகராட்சியில் பணியாற்றும் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் 15 மண்டலங்களில் உள்ள நோடல் அதிகாரிகளும், தங்கள் கட்டுபாட்டில் உள்ள வார்டுகளில் குப்பைகள், சாலை பணிகள், தெரு விளக்கு, மழைநீர் வடிகால் பணிகளை தினமும் ஆய்வு செய்து ஊழியர்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என கமிஷனர் சந்திரமோகன் நேற்று நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

    மாநகராட்சியின் தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் சாலை பராமரிப்பு பணிகள், சென்டர்மிடியன், நடைபாதை மற்றும் சுகாதாரப்பணிகளை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், நோடல் அதிகாரிகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கமிஷனர் புதிய நடைமுறையை இன்று முதல் செயல்படுத்தினார்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “நகரில் பல பகுதிகளில் குப்பைகள், கழிவுகள் முறையாக அள்ளப்படாமல் தேங்கி கிடக்கின்றன. துப்புரவு பணிகள் மேற்பார்வை செய்பவர்கள் இதனை கண்டு கொள்வது இல்லை.

    இதனால் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்றுவது இல்லை.

    ஒரு சிலர் தாமதமாக வேலைக்கு வருகிறார்கள். தெருக்களில் முறையாக குப்பை எடுக்காமல் செல்கின்றனர். கீழ்மட்ட அளவில் நடக்கும் தவறுகளால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

    அதுபோல பராமரிப்பு பணிகள், கட்டிட கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி விட்டு செல்லுதல் போன்றவற்றால் நகரின் தூய்மை கெடுகிறது. உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று சாலையில் இந்த பணிகளை சோதனை செய்யும் போது தவறுகள் ஏற்படாது. பணிகள் விரைவாக நடைபெறும்” என்றனர்.

    Next Story
    ×