search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மகளிர் முன்னேற்றம் நாட்டுக்கு அவசியம்
    X

    மகளிர் முன்னேற்றம் நாட்டுக்கு அவசியம்

    அறிவியலும் பண்பாடும் வளர்ந்த நாகரிக நிலையிலும் பெண்களின் முன்னேற்றத்தை சமுதாயம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையை பார்க்கிறோம்.
    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் என்று மகாகவி பாரதியார் கூறியபடி, இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து பட்டங்களை பெற்றுள்ளனர். சட்டசபைகளிலும் நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றுள்ளனர். நாடாளும் நிலைக்கு உயர்ந்துள்ள பெண்கள், கடந்து வந்த தடைகள் நிறைந்த பயணத்தை சிந்திப்போம்.

    சங்க காலத்தில் மகளிரும் ஆடவருக்கு இணையாய் கல்வியறிவு பெற்று விளங்கினர். இருபெரு வேந்தருக்கு தூதுவராக செல்லும் அறிவாற்றல் படைத்த புலவராக அவ்வையார் விளங்கினார். ஆனால் இடைக்காலம் பெண்களின் இருண்ட காலம் எனலாம். மதவாதிகள் மூடநம்பிக்கைகளை புகுத்தி பெண் கல்விக்கு தடை விதித்தனர்.

    ஆணுக்கு பெண் அடிமை என்ற நிலை உருவாயிற்று. பெண்கள் அஞ்சி, அடங்கி, ஒடுங்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. சமுதாயத்தின் கண்ணாக போற்றப்பட்ட பெண்கள் தாழ்ந்த நிலையை அடைந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் கொடுமை ஒழிந்தது. விதவைத் திருமணம் சட்டப்படி ஏற்கப்பட்டது. பெண்கள் கல்வி கற்கவும், வேலை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

    கடந்த நூற்றாண்டின் தொடக்கம் பெண்களின் மறுமலர்ச்சி காலமாக அமைந்தது. இம்மண்ணில் தோன்றிய சமுதாயச் சிந்தனையாளர் பலர் பெண் அடிமைக் கொடுமைகளை எதிர்த்து போராடினர். அதன் பயனாய் இன்று சம உரிமை பெற்றனர். பெண்கள் பட்டம் பெற்று பெரும் பதவிகளை ஏற்றுள்ளனர்.



    1975-ம் ஆண்டு அகில உலக பெண்கள் ஆண்டாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    தொட்டிலை ஆட்டுங்கை தொல்லுலகையும் ஆளும் என்பதை இன்றைய சமுதாயத்தில் நாம் கண்கூடாக காண முடிகிறது. தன்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் எது செய்தாலும் சரியே என்று கருதும் நிலையில் இருந்து விடுபட்டு, தனக்கு எதிராக பிறர் செய்யும் செயலை விமர்சிக்கும் துணிவு பெற்று வாழும் மனப்பக்குவத்தை இன்றைய பெண்கள் அடைந்துள்ளனர்.

    அறிவியலும் பண்பாடும் வளர்ந்த நாகரிக நிலையிலும் பெண்களின் முன்னேற்றத்தை சமுதாயம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையை பார்க்கிறோம். இந்நிலை மாறவேண்டும். ஆடவரிடையே மட்டுமின்றி பெண்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். பெண் என்பவள் அடிமையானவள் இல்லை என்பதை இருபாலரும் உணரவேண்டும்.

    தலைசிறந்து விளங்கிய ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் உந்து சக்தியாக பெண் இருக்கிறாள் என்பது உலகறிந்த உண்மை. அதனால் நாடு முன்னேற அவசியம் மகளிர் முன்னேற்றம் அடையவேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு வழிவகைகளை மேம்படுத்தவேண்டும்.
    Next Story
    ×