search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வருமானவரிச் சலுகைக்காக ஆயுள் காப்பீடு பெற்றால் கவனத்தில் கொள்ள வேண்டியவை
    X

    வருமானவரிச் சலுகைக்காக ஆயுள் காப்பீடு பெற்றால் கவனத்தில் கொள்ள வேண்டியவை

    வருமான வரிச்சலுகைக்காக நீங்கள் ஆயுள் காப்பீடு பெற நினைத்தீர்கள் என்றால், சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் நேரம் நெருங்குகிறது. பலரும் இப்போதுதான், வரிச் சலுகை பெறுவதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கத் தொடங்குவார்கள்.

    அந்த யோசனையில், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளும் அடங்கும். பிரிவு 80சி-ன் கீழ் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுவதால், பலரையும் அதைப் பற்றி யோசிக்க வைக்கிறது.

    ஆனால் வருமான வரிச்சலுகைக்காக நீங்கள் ஆயுள் காப்பீடு பெற நினைத்தீர்கள் என்றால், சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

    மனைவி, குழந்தைகள் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்தாலும், வருமான வரி கட்டுபவருக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் பெற்றோர்களுக்கு பெறும் ஆயுள் காப்பீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியாது.

    பிரிவு 80சி-ன் கீழ், இந்தக் காப்பீட்டுக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில் ரூ. 1.5 லட்சம் வரை மொத்த வருமானத்தில் இருந்து வரிவிலக்கு அளிக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.

    ஆனால் பலரும் அறியாத விஷயம், மொத்த கவரேஜ் தொகையில் பிரீமியத் தொகை ஒரு நிதியாண்டில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அந்த 10 சதவீதத்துக்கு மேல் செல்லும் பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை கிடையாது.

    இந்த எடுத்துக்காட்டைப் பாருங்கள். ஆயுள் காப்பீடு பாலிசி கவரேஜ் தொகை ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொண்டால், ஆண்டு பிரீமியத்தில் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரத்துக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும்.

    நீங்கள் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டு பிரீமியத்துக்கு வரிச்சலுகை பெறலாம் என்றாலும், கவரேஜ் தொகையில் பிரீமியம் அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 1.4.2012-க்குப் பிறகு எடுத்த பாலிசிகளுக்கு இது பொருந்தும். 31.3.2012-க்கு முன் எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு இது 20 சதவீதமாக உள்ளது.

    பிரிவு 80 யூ அல்லது பிரிவு 80 டிடிபியின் கீழ் வரிவிலக்குப் பெற நினைப்பவர்கள், அதாவது மாற்றுத்திறனாளிகளும், தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களும், ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மேலே கூறப்பட்ட கணக்கில் 15 சதவீதம் வரை அனுமதிக்கப்படும்.

    வருமானவரிச் சலுகைக்காக இப்படி எடுக்கப்பட்ட பாலிசி, இரண்டு வருடம் தொடர்ச்சியாக பிரீமியம் கட்டப்படாமல் நிறுத்தப்பட்டால் அல்லது சிங்கிள் பிரீமியம் காப்பீடு இரண்டு வருடங்களுக்குள் முடிக்கப்பட்டால், அதற்கு முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட வரிச்சலுகை செய்யப்பட்ட தொகை, (பிரிவு 80சி (5)) நடப்பு ஆண்டின் வருமானமாகக் காட்டப்படும்.

    ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்புடன், வரிச் சலுகையும் கிடைக்கும் என்பதால் ஆயுள் காப்பீடு என்பது நல்ல யோசனைதான். உடனே செயலில் இறங்கலாம்!
    Next Story
    ×