search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டுமனை மற்றும் நிலம் வாங்குவது சேமிப்புக்கு பாதுகாப்பு
    X

    வீட்டுமனை மற்றும் நிலம் வாங்குவது சேமிப்புக்கு பாதுகாப்பு

    தன்னிடம் சேமிப்பாக உள்ள பணம் அல்லது குடும்ப நலனுக்காக வாங்கப்படும் சொத்து என்ற நிலையில், ஒரு குடும்ப தலைவர் எடுக்கும் முடிவானது நிலம் அல்லது வீடு வாங்குவதாக இருக்கிறது.
    தன்னிடம் சேமிப்பாக உள்ள பணம் அல்லது குடும்ப நலனுக்காக வாங்கப்படும் சொத்து என்ற நிலையில், ஒரு மத்திய தர குடும்ப தலைவர் எடுக்கும் முடிவானது பெரும்பாலும் நிலம் அல்லது வீடு வாங்குவதாக இருக்கிறது. அந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்கு என்ன காரணம்..? என்பது பற்றி முதலீட்டு ஆலோசகர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    அவர்களால் தரப்படும் ஆலோசனைகளை முதலீடு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் என்று எடுத்துக்கொண்டால் அவை குறிப்பிட்ட ஒரு சில விஷயங்களுக்குள் அடங்குகின்றன. பொதுவாக மக்களிடையே காணப்படும் எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளாக அவை இருக்கின்றன. அவற்றை பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    பாதுகாப்பு உணர்வு :

    புராண காலம் முதல் இப்போதைய கணினி யுகம் வரையில் சொத்து என்பது பூமி எனப்படும் நிலம் சம்பந்தப்பட்டதாகவே இருந்து வந்ததை நாம் காண இயலும். தமக்கு சொந்தமான நிலம் என்ற நிலையில் இருக்கும் பாதுகாப்பு உணர்வு ஏற்பட முக்கியமான காரணம், நிலத்தின் பயன்பாட்டை இன்னொருவரால் எளிதில் எடுத்துக்கொள்ள இயலாது என்பதாகும். பெரும்பாலும், சம்பந்தப்பட்ட பூமியானது என்ன அளவு என்பதை விடவும், யாருக்கு சொந்தமாக இருக்கிறது என்றுதான் கவனிக்கப்படுறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நாடுகளில் நிலம் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த சந்தை பொருளாக பார்க்கப்படுகிறது.

    மேலைநாடுகள் :

    இந்தியாவை மற்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அவை வீடு, மனை சார்ந்த முதலீடுகள் தவிர மற்ற பல்வேறு வியாபாரம் மற்றும் வணிக ரீதியான முதலீடுகளைத்தான் முக்கியமாக கருதுகிறார்கள். அவர்களது பூகோள அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகள் நம்மை விடவும் பல விதங்களிலும் மாறுபட்டதாக இருப்பதும், அவர்களது நிலம் சார்ந்த முதலீட்டை அவசியமான ஒன்றாக கருத வாய்ப்பு இல்லாமல் செய்திருப்பதாகவும் கருதலாம். வளரும் நாடாகவும், மனித வளம் நிறைய இருக்கும் நாடாகவும் இந்தியா இருப்பதால், நிலத்திற்கான மதிப்பு வரும் காலங்களில் அதிகமாக ஆகும் என்பது முதலீட்டு ஆலோசகர்களது கருத்தாகும்.

    பொதுவான மனநிலை :

    ‘மண்ணுல போட்டது வீணாக போகாது..’ என்பது விவசாயம் சார்ந்த அர்த்தத்தை மட்டும் தருவதாக எடுத்துக்கொள்ள இயலாது. ‘கம்மி ரேட்டுல வந்துச்சுன்னு முன்னால வாங்கிப்போட்டது இப்போ அதுதான் அவசரத்துக்கு கை கொடுக்குது..’ என்று பலருக்கும் நிலம் சார்ந்த முதலீடு பற்றிய அனுபவங்கள் இருக்கின்றன. கடந்த காலத்தின் செய்யப்பட்ட நிலம் சார்ந்த முதலீடுகள் நிகழ்காலத்தில் தரக்கூடிய பொருளாதார பாதுகாப்பை மத்திய தர மக்கள் பெருமளவு விரும்புகிறார்கள்.

    இன்னும் சொல்வதென்றால் பரம்பரையாக நமது நாட்டு மக்களிடையே முக்கியமாக கடைப்பிடிக்கப்படும் பழக்கம் நிலம் மற்றும் தங்கம் ஆகியவற்றை தங்கள் வாரிசுகளுக்காக சேமித்து வைப்பதுதான். பொதுமக்களிடையே இருக்கும் இந்த வகையான சேமிப்பு மனோபாவம்தான் நமது தேசிய அளவிலான பொருளாதார பாதுகாப்புக்கு வழி வகுக்கிறது என்று நிபுணர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்.

    பாதிப்புகள் இல்லை :

    புதியதாக பல சொத்து வகைகள் தோன்றினாலும், கண்டுபிடிக்கப்பட்டாலும் ‘ரியல் எஸ்டேட்’ எனப்படும் வீட்டுமனை முதலீடு என்பது நமது மக்களிடையே பல தலை முறைகளாக வளர்ந்து வந்துள்ளது. ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பாக மிக எச்சரிக்கையுடன் செயல்படும் நமது மக்களின் மனோபாவம் நிலத்தை ஒரு நல்ல தேர்வாகவே கருதுகிறது. நிலத்தின் தேவையும் அதிமாக இருப்பதால் லாபம் தரும் ஒரு வழியாகவும் இது உள்ளது. பொருளாதார ரீதியாக ஒரு நாடு எவ்வளவு பாதிப்படைந்தாலும், மனை, நிலம் போன்ற சொத்துக்களை அவ்வளவாக அது பாதிப்பதில்லை என்ற கருத்தும் உள்ளது.

    உள் கட்டமைப்புகள் :

    வளர்ந்து வரும் நாடு என்ற நிலையில் முழு வளர்ச்சியை அடைய, நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகள் பல மடங்கு வளர்ச்சி பெற வேண்டியதாக உள்ளது. இதனால் நில சந்தைகளில் முதலீடு செய்வது நல்ல பலன் தரும் என்று பரவலான நம்பிக்கை உள்ளது. நிலம் தொடர்பான சொத்துக்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறுவதோடு மற்ற வகை சொத்துக்களை விடவும் அதிக இலாபமும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
    Next Story
    ×