search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு, நாடு சிறப்படைய பெண் கல்வி அவசியம்
    X

    வீடு, நாடு சிறப்படைய பெண் கல்வி அவசியம்

    பெண்கள் கல்வி கற்றுப் பெருமை பெற்றுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வீடும், நாடும் சிறப்படையும்.
    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    என்று பல்லாண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார் நம் தேசியக்கவிஞர் பாரதியார். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமென்றால் அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்றிருத்தல் வேண்டும்.

    மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்குலம் உயர்வு பெற்றால் தான் உலகம் உய்யும். பெண்மை- தாய்மை-இறைமை என்று பெண்ணின் பெருமையைப் போற்றுவார் திரு.வி.க. வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். ஒரு வீட்டில் ஒரு பெண் நல்லவளாக இருந்தால் தான் அவ்வீடு சிறப்படையும்.

    “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென இல்லவள் மாணாக் கடை”

    என்ற வள்ளுவர் குடும்பத் தலைவியின் சிறப்பைக் கூறுகிறார்.

    சங்க காலத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். ஔவையார், நச்செள்ளையார், ஒக்கூர்மாசாத்தியார் போன்ற பெண் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். ஔவையார் அதியமானுக்காக தூது சென்றார் என்ற செய்தியையும் புறநானூற்றில் காண்கிறோம். இடைக்காலத்தில் பெண்களை அடிமைப்படுத்தினர். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று அறிவிற்சிறந்த பெண்களை இழிவுபடுத்தினர். உடன்கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு போன்ற மூடப்பழக்க வழக்கங்களெல்லாம் பெண்களுடைய நிலையை இழிவுபடுத்தியது.

    ஆங்கிலேயர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கத் தொடங்கினர்.

    இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்தே பெண்கள் பலதுறையிலும் கல்வி கற்றுச் சிறப்புறத் தொடங்கினர். பெண்கள் உயர்கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். பெரும் பதவிகளைப் பெற்றனர். நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆளுநராகவும், ஆட்சியராகவும், அறிவியலறிஞராகவும் விளங்கும் அளவிற்கு பெண்கள் கல்வி கற்கின்றனர்.

    பெண்கள் கல்வி கற்றால் தான் நாடு சிறப்படையும். கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று கூறுகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே அக்கல்வியால் பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் பயன்படுகிறது. கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறாள்.

    “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பது போல குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்கி தலை சிறந்த குடிமகனாக்குவது கல்வியறிவு பெற்ற பெண்களால் தான் இயலும். பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் ஆற்றலும், துணிவும் கல்வியறிவு பெற்ற பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண் கல்வியின் சிறப்பை உணர்ந்த அரசு பெண் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.

    பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் பற்றி எல்லோரும் அறியும்படி கூறி பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பெரியார், பெண்கள் முன்னேற்றம் அவர்கள் முயற்சியினாலேயே முடியும் என்று கூறினார். பாவேந்தர், படித்த பெண்கள் உள்ள குடும்பம் பல்கலைக் கழகம், என்று போற்றுவார்.

    பெண்கள் கல்வி கற்றுப் பெருமை பெற்றுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வீடும், நாடும் சிறப்படையும்.
    Next Story
    ×