search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஓய்வு நாளில்கூட ஓய்வற்ற பெண்கள்
    X

    ஓய்வு நாளில்கூட ஓய்வற்ற பெண்கள்

    ஞாயிற்றுக்கிழமைகள் வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஓய்வு நாட்கள் என்று கூறப்பட்டாலும், அன்று வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்து பெண்கள் அலுத்துப்போக வேண்டியதாகிவிடுகிறது.
    ஞாயிற்றுக்கிழமைகள் வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஓய்வு நாட்கள் என்று கூறப்பட்டாலும், அன்று வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்து பெண்கள் அலுத்துப்போக வேண்டியதாகிவிடுகிறது. கடந்த ஆண்டு அப்படி அலுப்பை தந்திருந்தாலும், புத்தாண்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் மகிழ்ச்சியாக செலவிட வாய்ப்பிருக்கிறது.

    ஞாயிற்றுக்கிழமை, பெண்கள் ஆவலோடு காத்திருக்கும் நாள். வார தொடக்கத்தில் ஒன்றிரண்டு நாட்கள் கடந்ததுமே ‘ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும்?’ என்ற மகிழ்ச்சியான எண்ண ஓட்டம் உருவாகிவிடுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும், ஒவ்வொரு மணி நேரத்திலும் சிறிது சிறிதாக அந்த மகிழ்ச்சி குறைந்துகொண்டே போகிறது. ஏன்என்றால், பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை, கணவருக்கு அலுவலக விடுமுறை, ஆனால் பெண்களுக்கோ அன்று தான் இரட்டிப்பு வேலை.

    நிறைய பெண்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் சற்று அதிக நேரம் தூங்க விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலும் அப்படி தூங்கமுடிவதில்லை. ஏன்என்றால், வாரம் முழுவதும் விடுபட்ட வேலைகளை அன்று செய்து முடிக்கவேண்டியிருக்கும். அதிலும் நிறைய ஆண்கள் அன்று ‘சமையலில் ஏதாவது ஸ்பெஷல் இருக்க வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள்.

    அவர்களின் விருப்பத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திப்போட நினைத்தாலும், சில வீடுகளில் விருந்தினர்களின் வருகை அதற்கு இடம் கொடுக்காமல் செய்து விடும். வீட்டிற்கு வருபவர்களுக்கு விதவிதமாக சமைத்து பரிமாற வேண்டியிருப்பதால் வேலைப்பளு அதிகமாகிவிடும். கூடவே வீட்டையும் சுத்தமும், அலங்காரமும் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

    விருந்தினர்களை உபசரித்து, அவர்கள் திரும்பிச்செல்லும் வரை மற்ற வேலைகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கும். பின்னர் துரிதமாக செயல்பட்டு அந்த வேலைகளையெல்லாம் முடிக்க வேண்டியதாகிவிடும். மறுநாள் முதல்- வாரத்தின் இறுதி நாள் வரை பிள்ளைகள், கணவன் உடுத்தும் துணிகளை இஸ்திரி போட்டு வைக்க வேண்டியிருக்கும். இப்படி பெண்களுக்கு எவ்வளவோ வேலைகள் அடுக்கடுக்காக வரிசை கட்டி நிற்கும்.

    சாதாரண குடும்பத் தலைவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு பாரமான நாள் என்றால், வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு அது இரட்டிப்பு பாரமான நாள். இதைப்பற்றியெல்லாம் பெரும்பாலான ஆண்கள் சிந்திப்பதில்லை. வாரம் முழுவதும் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில், நாளுக்கு நாள் வீட்டு அத்தியாவசிய பொருட்கள் செலவாகிக்கொண்டே இருக்கும். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் என்னென்ன பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும் என்று நீள பட்டியல் போட வேண்டியிருக்கும். அவைகளை எல்லாம் வாங்க ஷாப்பிங் செல்லவேண்டியதிருக்கும்.

    நிறைய பெண்கள் மகனுக்கு திருமணம் செய்துவைத்து மருமகள் வந்துவிட்டால் தங்களுக்கு வீட்டு வேலை குறைந்துவிடும் என்று நினைப்பார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் மருமகளாக இருந்தால் அவளுக்கும் சேர்த்து மாமியார் வேலை செய்ய வேண்டியிருக்கும். வயதான மாமியாராக இருந்தால் சில வேலைகளை செய்வதற்கு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலைக்கு செல்லும் மருமகள் என்றால் அவள் அன்று மட்டும் ஓய்வு தேவை என்பாள். அதனால் சில மாமியார்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சுமையாகி விடுகிறது.

    மாமியாராக இருந்தாலும், மரு மகளாக இருந்தாலும் பெண் ஓய்வில்லாமல் வேலை செய்தால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிக மாகிவிடும். அது நாளடைவில் அவர்கள் உடலையும், மனதையும் பாதிப்புக்குள்ளாக செய்து விடும். எந்த நேரமும், ‘அடுத்து என்ன வேலை செய்வது?’ என்ற ஒரே சிந்தனையில் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வேறு மாற்று சிந்தனைகள் தோன்றுவதே இல்லை. இந்த நிலை நீடித்தால் அவர்கள் மனதும், உடலும் வேகமாக தளர்ந்துவிடும்.

    பெரும்பாலான வீடுகளில் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு டென்ஷன் ஆவதற்கும், அதனால் பிரச்சினைகள் என்று தோன்றுவதற்கும் அவர்களுடைய இறுக்கமான மனநிலைதான் காரணம். மனஇறுக்கம் தொடர்ந்தால், எதையும் நிதானமாக சிந்தித்து முடிவு செய்யும் திறன் குறைந்து போய்விடும். எப்போதும் ஒருவித பரபரப்பு, பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். அதன் தாக்கமாக சிந்திக்கும் ஆற்றல் குறைந்து போய்விடும். பல்வேறு விதமான ஆரோக்கிய குறைபாடுகளுக்கு இந்த ஓய்வற்ற சூழலே காரணமாகும். ஓய்வெடுக்காமல் தொடர்ந்து உழைக்கும் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பதில் சீரற்ற நிலை உருவாகி, உடலும்- மனதும் பாதிக் கப்படுகிறது.

    ஒரு குடும்பத்தை பெண்கள் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றால், அவர்களின் மன நலனும், உடல் நலனும் சிறப்பாக இருக்கவேண்டும். அப்படி சிறப்பாக அமையவேண்டும் என்றால், ‘பெண்களின் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ பற்றி குடும்பத்தினர் சிந்தித்தே ஆகவேண்டும்.

    சரி.. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இந்த புத்தாண்டில் இருந்து பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளை மகிழ்ச்சியாக செலவிட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்!

    * விருந்தினர் யாராவது ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு வர விரும்பினால் அவர்களிடம், ‘போன் செய்துவிட்டு வாருங்கள்’ என்று கூறுங்கள். அதன் மூலம் அவர்களை வரவேற்கவும், உபசரிக்கவும் உங்களால் நேரம் ஒதுக்கிக்கொள்ள முடியும்.

    * சமையல், துணிதுவைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து வேலைகளையும் பெண்களே தனியாக செய்யும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. எல்லோரும் பகிர்ந்து செய்ய வேண்டும். உதாரணத்துக்கு சமையலில் மனைவிக்கு உதவுவதை கணவர் கவுரவ குறைச்சலாக நினைக்கிறார் என்றால், முதலில் குழந்தைகளை சமையல் அறையை நோக்கி இழுங்கள். நீங்கள் குழந்தைகளோடு சேர்ந்து ஜாலியாக லூட்டி அடித்து சமைக்கவும், ருசிபார்க்கவும் ஆரம்பித்துவிட்டால், கணவரும் வேறு வழியின்றி வந்து ஒட்டிக்கொள்ள வேண்டியதாகிவிடும். கணவரோடு, குழந்தைகளோடு சேர்ந்து சமைப்பது சுமை அல்ல,ஒரு ஜாலியான பொழுது போக்கு என்ற கோணத்திற்கு சமையலை கொண்டு சென்றுவிட்டால், பெண்களின் பாதி சுமை குறைந்துவிடும்.

    * பேப்பர், புத்தகங்கள் அடுக்கிவைப்பது, செடிக்கு தண்ணீர் விடுவது, துணி மடிப்பது, பிரிட்ஜில் காய்கறிகளை அடுக்கிவைப்பது போன்ற வேலைகளை குழந்தைகளிடம் ஒப்படைத்துவிடுங்கள். இதனால் வீட்டில் குழந்தைகளின் தேவையற்ற அரட்டைகள் குறையும். டி.வி. பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பிரச்சினைக்குரிய பொழுதுபோக்குகளும் கட்டுப் படும்.

    * அதிகமான வேலைகள் இருந்தாலும் மாலையில் இரண்டு மணி நேரமாவது குடும்பத்தோடு வெளியே சென்று பேசி, சிரித்து விளையாடி மனதையும், உடலையும் இலகுவாக்கிவிட்டு வாருங்கள்.

    * இந்த புத்தாண்டில் இருந்து எல்லா வேலைகளையும் ஞாயிற்றுக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கி சேர்த்துவைக்காதீர்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஓரளவு வேலைகளை முடித்துக்கொண்டே இருங்கள்.

    * குடும்பத்தில் இருக்கும் கணவரும், குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாயை நினைத்துப்பாருங்கள். ‘தாயும் நம்மைபோன்ற உடல் கொண்ட ஒரு ஜீவன்தான், அதற்கும் ஓய்வு தேவை’ என்பதை உணர்ந்து வீடுகளில் வேலைகளை பகிர்ந்து அன்பை பெருக்குங்கள்.
    Next Story
    ×