search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுகமாய் ஆண்கள்... சுமைதாங்கி பெண்கள்...
    X

    சுகமாய் ஆண்கள்... சுமைதாங்கி பெண்கள்...

    மனைவியை சுமைதாங்கியாக்கும் வாழ்க்கை, தங்களுக்கு சுகமானதல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    தனியாக சம்பாதித்து, தானே குடும்பத்தை நிர்வகிக்கும் சுமைதாங்கி பெண்களின் எண்ணிக்கை, இந்தியாவில் பெருகிவருகிறது. பொறுப்பற்ற கணவரையோ, குடிகார கணவரையோ வாழ்க்கைத் துணையாக அடைந்த பெண்களும், கணவரை இழந்த பெண்களும் வாழ்ந்து காட்டுவதற்காக தனியாளாக சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.

    கணவர் உயிருடன் இல்லாதபோது, கணவரை இழந்த சோகத்தை தாங்கிக்கொண்டு அவர் மீதான அன்பை பலமாக எடுத்துக்கொண்டு பெண்கள் தனியாளாக வாழ முன்வருகிறார்கள். கணவர் உயிரோடு இருந்தும், அவரால் எந்த பலனும் இல்லாத நிலை ஏற்படும்போது, ஒருசில பெண்கள் அதிலிருந்து மீள விவாகரத்து பெற்று தனியாளாக வாழ்க்கை நடத்துகிறார்கள். இன்னொரு வகையினர் குழந்தை நலன் கருதியோ, வேறு சூழ்நிலைகளை கருத்தில்கொண்டோ விவாகரத்து பெறாமல், தனியாக பாரத்தை சுமந்து குடும்பத்தை கரை சேர்க்கிறார்கள்.

    பெண்கள், ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கும் சூழ்நிலைக்கு உயர்ந்துவிட்டார்கள். அதனால்தானோ என்னவோ ‘மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள்’ என்ற எண்ணத்தில், வீட்டு நினைப்பே இல்லாமல் வாழும் ஆண்கள் அதிகரித்து வருகிறார்கள். இது பெண்களை நிரந்தர சுமை தாங்கிகளாக மாற்றிவிடுகிறது. இந்தப்போக்கு குடும்பத்தை நிலைகுலைய வைத்துவிடும் என்பதை ஆண்கள் அறிவதில்லை.

    பொறுப்பில்லாத கணவர்களால் நிறைய பெண்கள் புலம்பியபடி வாழ்க்கையை கடத்துகிறார்கள், ‘ஏதோ பெயருக்கு கணவன் என்று அவர் இருக்கிறார். அவரால் எந்த லாபமும் இல்லை. நானே உழைத்து, சம்பாதித்துத்தான் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது’ என்று மனம் புளுங்குகிறார்கள். ‘தங்களுக்கு வாழ்க்கையில் விடுதலையே கிடையாதா?’ என்ற ஏக்க பெருமூச்சையும் வெளிப்படுத்துகிறார்கள்.

    குடும்பத்திற்கு பயன்படாமல் ஊதாரியாய் இருக்கும் ஆண்களைவிட, மனைவியை துன்புறுத்தி பணம் பறிக்கும் ஆசாமிகளாக மாறுகிறவர்களே பெண்களுக்கு அதிக கவலையை ஏற்படுத்து கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள், குடும்பத்தை கவனிக்க மனைவி சம்பாதித்து வைத்திருக்கும் குறைந்தபட்ச பணத்தையும் அப கரித்து, குழந்தைகளையும், குடும்பத்தையும் விரைவில் வீதிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

    கணவரால் அவஸ்தைபடும் பெண்கள் இருதலைக்கொள்ளி எறும்புகளாகிவிடுகிறார்கள். ஒருபுறம் பண கஷ்டம் அவர்களை வாட்டும். மறுபுறம் குடிகார கணவர் போன்றவர்களால் அடி உதைகளையும் வாங்கவேண்டியதாகிவிடும். இதன் மூலம் குடும்ப மானமும், தன்மானமும் கேள்விக்குரியாகும் நிலை தோன்றும். அதை ஒரு பொருட்டாகவே கருதாத ஆண்கள், தினமும் தொந்தரவு கொடுத்துக்கொண்டு மனைவியை நிரந்தர சுமைதாங்கியாக்கி விடுவார்கள்.

    இப்படிப்பட்ட கணவர்களால் வாழ்க்கையோடு மல்லுக்கட்டும் பெண்கள், காலப்போக்கில் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிவிடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் கணவரை திருத்த முடியாமலும், திருமண பந்தத்தில் இருந்து விலக முடியாமலும் தவிக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் குடும்பத்தலைவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    ‘பெண்கள் இப்படி மனம் வெதும்பி வாழ வேண்டியதில்லை. திருமணமான புதிதில் இருந்தே கணவரை வழிக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்’ என்று ஆலோசனை தருகிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

    “ஆண்கள் சம்பாதிக்காமல் பொறுப்பற்ற நிலையில் செயல்பட சோம்பல்தான் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதைத் தவிர்த்தும் பல காரணங்கள் உண்டு. ஆண்களின் உடல்நிலை ஒத்துழைக்காமல் இருக்கலாம். சிறுவயதிலிருந்து அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, அதனால் ஏற்பட்ட மனநிலையும் காரணமாக இருக்கலாம்.

    காதல் தோல்வி, பொருளாதார வசதியின்மை, விருப்பப்பட்ட வாழ்க்கை அமையாமை போன்றவைகளும் ஆண்களை பொறுப்பற்றவர்களாக்குகிறது. அதீத கற்பனை கொண்ட சிலர், எதிர்பார்த்த வாழ்க்கை அமையாதபோது ஏமாந்துபோகிறார்கள். அவர்கள் கிடைத்த வாழ்க்கையை புறக்கணித்தால் அதன் மூலம் தன் மனம் ஆறுதலடையும் என்று தவறாக கருதிவிடுகிறார்கள்.

    இன்னும் சில ஆண்கள், தன்னை மதிக்காத மனைவியை பழிவாங்க வேண்டும் என்ற கொடூர மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டு, மனைவியை ஒதுக்குவதாக எண்ணி குடும்பத்தை புறக்கணித்து பாழ்படுத்தி விடுவார்கள். தன்னுடைய தலையீடு இல்லாமல் குடும்பம் நன்றாக நடக்கும் போது, நான் ஏன் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்” என்று விளக்கம் தருகிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

    ‘சரி.. இப்படிப்பட்ட ஆண்களுக்கு தங்கள் தவறை புரியவைப்பது எப்படி? அவர்களை திருத்துவது எப்படி?’- என்ற கேள்விக்கு, அவர்களே ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகத் தருகிறார்கள்.

    “சதீஷ் என்ற நபரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அடிப்படையில் அவர் நல்லவர்தான். ஆனால் எதிலும் அக்கறையின்றி, பொறுப்பின்றி இருந்தார். வேலைக்குச் செல்வார். சம்பளம் கிடைத்ததும் கண்டபடி செலவு செய்வார். பெற்றோருக்கு பணம் எதுவும் கொடுத்ததில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார், பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர் நினைத்து, ஓரளவு வசதியான இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்குப் பிறகு அவரது பொறுப்பற்ற போக்கு அதிகரிக்கவே செய்தது.

    மனைவியின் சம்பாத்தியத்தால் வாழ்க்கை ஓடியது. கணவர் வேலைக்குப் போனார். ஆனால் கிடைத்த பணம் எதையும் குடும்ப செலவுக்கு மனைவியிடம் கொடுக்கவில்லை. மனைவியும் சம்பாதித்து தந்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. செலவுக்கு அதிகம் பணம் தேவைப்படும் போதெல்லாம் மனைவி, தன் பெற்றோரிடம் வாங்கியே நிலைமையை சமாளித்து வந்தாள்.

    இந்த நிலை தொடர்ந்ததால், ‘தான் பணம் கொடுக்காமலே குடும்பம் நன்றாக நடக்கத்தானே செய்கிறது. அதனால், தான் வேலைக்கு போகாவிட்டாலும் குடும்பச் செலவுகளை மனைவி சமாளித்துக்கொள்வாள்!’ என்று முடிவெடுத்து, அவர் வேலைக்கு செல்லவில்லை. அதனால் கணவன்- மனைவி உறவில் சிக்கல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இனியும் சேர்ந்து வாழ்ந்து பலனில்லை என்ற முடிவுக்கு வந்து, விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினார்கள்” என்று இந்த சம்பவத்தை கூறும் மனோதத்துவ நிபுணர்கள், “இந்த சம்பவத்தில் இருதரப்பு பெற்றோரும் நடந்துகொண்ட விதம் சரியல்ல” என்கிறார்கள்.

    ஏன்?

    “அந்த ஆணை எடுத்துக்கொண்டால் அவரை, அவரது பெற்றோர் பொறுப்பற்ற நிலையில் வளர்த்துவிட்டார்கள். வேலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் பணம் எதையும் வாங்காமல் அவருக்கு உணவளித்து, அவரது பொறுப்பற்ற நிலைக்கு துணைபுரிந்திருக்கிறார்கள்.

    மகன், சொந்த குடும்பத்திற்கே சுமையாகிவிட்ட நிலையில், பொறுப்பற்ற அவருக்கு திருமணம் செய்துவைத்து இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள்.

    அந்த பெண்ணின் பெற்றோரை எடுத்துக்கொண்டால் அவர்கள், திருமணம் செய்துகொடுத்துவிட்ட பின்பும் மகளுக்கு பணம் கொடுத்து தங்கள் மருமகன் சோம்பேறியாகவே இருக்க துணை புரிந்திருக்கிறார்கள். மனைவியும், கணவரை உழைக்கத் தூண்டியிருக்கவேண்டும். உழைத்து சம்பாதித்து பணத்தை கொண்டு வந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிர்பந்தத்தை முதலில் இருந்தே கொடுக்கவேண்டும்.

    பெண்கள், தாங்கள் எவ்வளவு சுமையையும் தனியாக சுமக்க தயாராக இருப்பதுபோல் ஆண்களிடம் காட்டிக்கொள்ளக்கூடாது. அவர்கள் அப்படி சுமக்கவேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் இந்த உலகத்தில் சுகமாக வாழத்தான் பிறப்பெடுத்திருக்கிறார்கள். யாரும் சுமைதாங்கிகளாக வாழ்வதற்காக பிறக்கவில்லை என்பதை பெண்களும், ஆண்களும் புரிந்துகொள்ளவேண்டும். இதை புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தினால்தான் வாழ்க்கை இனிக்கும்” என்று ஆலோசனை தருகிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

    மனைவியை சுமைதாங்கியாக்கும் வாழ்க்கை, தங்களுக்கு சுகமானதல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும்.
    Next Story
    ×