search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி
    X

    பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி

    டிசம்பர் மாதத்தின் சம்பள தேதியும் நெருங்கிவிட்டது. இந்நிலையில் சம்பள பணத்தை சுலபமாக எடுப்பது எப்படி? என்ற கேள்வியிலேயே அதற்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
    ஸ்கேன் அண்ட் பே..! மொபைல் பேங்கிங்..! ஆன்லைன் பேங்கிங்..!

    ‘சம்பள தேதி நெருங்கிவிட்டது... வீட்டு வாடகை, மளிகை பில், மின்சார கட்டணம், பால் பில், பள்ளி-கல்லூரி கட்டணங்கள்... என மாத செலவுகள் வரிசைக்கட்டி நிற்கிறது. எப்படி சமாளிக்க போகிறோம்’ - இப்படி ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாட்களையும் ஐநூறு, ஆயிரம் கவலைகளுடன் ஆரம்பிக்கும் குடும்ப தலைவர்-தலைவிகளுக்கு, இந்த மாதம் 500, 1000 ரூபாய் நோட்டுகளே பெரும் கவலையாக மாறிவிட்டன.

    ‘பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பால், இந்திய நாட்டின் பண பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கிபோய்விட்டது. அதன் தாக்கம்.. சம்பள பணத்தை ஏ.டி.எம். மையங்களில் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது சுலபமாக எடுத்து வந்த கலாசாரம்.... இந்த மாதம் காணாமல் போய்விட்டது.

    பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், தங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்க... டிசம்பர் மாதத்தின் சம்பள தேதியும் நெருங்கிவிட்டது. இந்நிலையில் சம்பள பணத்தை சுலபமாக எடுப்பது எப்படி? என்ற கேள்வியிலேயே அதற்கான பதிலும் அடங்கியிருக்கிறது. ஆம்..! சம்பள பணத்தை எடுக்க ஏன் வங்கிக்கும், ஏ.டி. எம்.மையங்களுக்கும் செல்லவேண்டும். கையில் ரொக்க பணம் இல்லாமல் செலவினங்களை சமாளிக்க ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறதே...!

    அதில் இணையவழி தொழில்நுட்பம் இன்றைய சூழலுக்கு ஏற்ற சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

    மொபைல் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங்கை அடிப்படையாக கொண்டு ஏராளமான செயலிகள் இயங்கி வருகின்றன. இதை ‘ஈ-வாலட்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

    ‘அது என்ன... ஈ-வாலட்’ என்று கேட்கிறீர்களா..? நம்முடைய மணி பர்சுகள் தான் தற்போது, செயலி வடிவில் டிஜிட்டல் பர்சுகளாக மாறியிருக்கின்றன. இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஸ்மார்ட்போன்கள் நுழைந்துவிட்டதால்... ‘ஈ-வாலட்’ களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்தியன் வங்கியின் ‘இன்ட்-பே’, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ‘படி’, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ‘பாக்கெட்’.... என ஈ-வாலட்களின் பட்டியல் வங்கி கணக்குகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

    இவைமட்டுமின்றி ‘பே யூ மணி’, ‘பே-டியம்’, ‘ஆக்ஸிஜன்’, ‘மோபிகுவிக்’... போன்ற வங்கி சாராத செயலிகளும் உபயோகத்தில் இருப்ப தால் ஆட்டோ சவாரி, மொபைல் ரீசார்ஜ், ஷாப்பிங் கட்டணங்கள், ஓட்டல் பில், ரெயில் டிக்கெட்டுகள்... என சகல காரியங்களையும் ‘ஈ-வாலட்’ செயலிகளை கொண்டேமுடித்துவிடுகிறார்கள்.

    சில வங்கிகள் ஆன்லைன் பேங்கிங் இணையதள பக்கத்திலேயே மின்சாரம், எல்.ஐ.சி.... போன்ற அத்தியாவசிய கட்டணங்களுக்கான இணைப்புகளை வைத்திருக்கிறது. இன்னும் சில வங்கிகள்... மாதந்தோறும் கட்டவேண்டிய கட்டணங்களை தன்னிச்சையாக ஆன்லைனில் செலுத்திவிடும் வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது. இப்படி சுலபமான வசதிகள் இருந்தாலும், சம்பள பணத்தை... கைவிட்டு எண்ணி, பணம் கொடுக்கவேண்டியவர்களுக்கு தன் கைப்பட கொடுக்கவே நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். அதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க தான் வேண்டும்..!
    Next Story
    ×