search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நட்பில் கலந்திருக்கும் பொறாமை - அடையாளம் காண்பது எப்படி?
    X

    நட்பில் கலந்திருக்கும் பொறாமை - அடையாளம் காண்பது எப்படி?

    நஞ்சு கலந்த நண்பர்களை கண்டுபிடிப்பது கடினம். பல இழப்புகளுக்குப் பின்பு வலியுடன்தான் நஞ்சு நிறைந்த நெஞ்சம் கொண்ட நண்பர்களை கண்டறிய முடியும்.
    நட்பில் கலக்கும் நஞ்சின் பெயர் பொறாமை. எதிரிகள் மேலானவர்கள். எப்போதும் எதிராகவே நிற்பார்கள். விழிப்போடு இருந்து அவர்களை சமாளித்துவிடுவோம். ஆனால் இந்த நஞ்சு கலந்த நண்பர்களை கண்டுபிடிப்பது கடினம். பல இழப்புகளுக்குப் பின்பு வலியுடன்தான் நஞ்சு நிறைந்த நெஞ்சம் கொண்ட நண்பர்களை கண்டறிய முடியும்.

    இப்படிப்பட்ட நண்பர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். இவர்களில் சிலரை தவிர்க்க முடியாது. ஆனால் அடையாளம்கண்டு கொண்டால் குறைந்தபட்சம் அவர்களிடமிருந்து விலகியாவது இருக்கலாம்.

    நட்பில் எப்படி நஞ்சு கலக்கிறது என்று பார்ப்போமா!

    ரகசிய வெளிப்பாடு :

    நட்பு என்ற வட்டத்திற்குள் ஒருவர் வந்ததும், அவர் மீது நம்பிக்கை வந்து விடுகிறது. அப்போது ரகசியம் என்று எதையும் பாதுகாக்காமல், மனம் திறந்து எல்லாவற்றையும் பேசி விடுகிறார்கள். அப்போது அவருக்குள் மட்டுமே இருந்த ரகசியம், நண்பரையும் சென்றடைந்து விடுகிறது.

    அவரது வளர்ச்சியில் அந்த நண்பர் பொறாமை கொள்ளும்போது அதையே ஒரு ஆயுதமாக்கிவிடுகிறார். நண்பரின் அந்தரங்க விஷயங்களை தெரிந்துகொண்டு அவரையே பிளாக்மெயில் செய்துவிடும் அளவுக்குகூட சென்றுவிடுகிறார்கள். மனதில் உள்ளதை யாரிடமாவது சொன்னால் மனபாரம் குறையும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

    சிலரோ அந்த அந்தரங்க செயலை பெரிய சாதனையாக நினைத்து பகிர்ந்துகொள்கிறார்கள். ரகசியங்கள் ஒருவரிடமிருந்து வெளியேறிவிட்டாலே, அது எந்த நேரத்திலும் அவரை திருப்பித்தாக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நட்பில் நஞ்சை கலக்கும் தன்மையுடையவர்களிடம் ஒருபோதும் ரகசியங்களை பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

    அப்படிப்பட்ட நஞ்சு நண்பர்களை உங்களால் அடையாளம் காண முடியும் எப்படி?

    அடுத்தவர்கள் சொல்லும் ரகசியங்களை உங்களிடம் ஒருவர் பகிர்ந்துகொள்கிறார் என்றால், அவர் விரைவிலே உங்கள் ரகசியங்களையும் வெளியே கசியவிட்டுவிடுவார் என்பதை உணருங்கள். அவரிடம் ரகசியங்களை சொல்வதை தவிர்த்து விடுங்கள்.

    இனிப்பில் கசப்பு :

    நண்பர் ஒருவர் உங்களிடம் வந்து, தனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது என்று சொன்னால், ‘ஏதோ இப்போதாவது நிச்சயமாச்சே! நான், உனக்கு கல்யாணமே ஆகிவிடாமல் போயிடுமோன்னு கவலைப்பட்டேன்’ என்று சொன்னால், அவர் மீது உங்களுக்கு பொறாமை இருக்கிறது என்றுதான் அர்த்தம். எப்போது நிச்சயமானால் என்ன? திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம்தானே. உற்சாகமாக வாழ்த்திவிட்டு போக வேண்டியதுதான்!

    இன்னும் சிலரது பேச்சு, கல்யாணத்திற்கு முன்பே அவருக்கு பயத்தை ஏற்படுத்தி விடும். ‘நீ எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வாய். ஆனால் புதுப்பொண்டாட்டியிடம் அதை எல்லாம் காட்டிவிடாதே. இன்றைய பெண்கள் தைரியசாலிகள், நன்றாக படித்து விட்டு, சுயமாக சம்பாதிக்கவும் செய்கிறார்கள். சின்ன மனஸ்தாபம் வந்தாலும் விவாகரத்து, கோர்ட்டுன்னு போயிடுவாங்க’ என்பார்கள். இப்படி பேசுபவர்கள் பொறாமையின் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    நண்பனுக்கு பேசி முடிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தால், ‘இந்த காலத்தில் அழகான பொண்ணுங்களை நம்பவேகூடாது. கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டபடி திரியுதுங்க. அப்புறம் ஏமாந்த இளிச்சவாயனை கட்டிக்கிட்டு செட்டிலாயிடுதுங்க. இதெல்லாம் இந்த காலத்துல சகஜமா போச்சுப்பா. உனக்கு பார்த்திருக்கிற பொண்ணும் அழகா இருக்கு. அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சிக்கோ’ என்று அவரை அடிவயிறு கலங்கவைத்துவிடுவார்கள்.

    வீடும், வாயும் :

    கஷ்டப்பட்டு ஒருவர் வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு அழைத்திருப்பார். வீட்டை நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு, ‘வீடு என்னவோ நல்லாதான் இருக்கு. ஆனால் அக்கம்பக்கம் அவ்வளவு நல்லா இல்லை. படுக்கை அறை இந்த பக்கம் இருக்கிறது. வாஸ்து பிரகாரம் உயிருக்கே ஆபத்தாகிவிடும். எதுக்கும் ஒரு பரிகார பூஜை பண்ணிடு’ என்று கூறும் அறிவுரையில் ஆழமாக பொறாமை ஒளிந்திருக்கும்.

    ‘அடடா இவ்வளவு செலவழிச்சி கட்டியிருக்கியே பாவம்பா நீ. இதே வீட்டை நான் கட்டும்போது இதுல பாதி பணம்தான் செலவாச்சி. வீட்டைக் கட்டிக்கொடுத்தவன் உன்னை நல்லா ஏமாற்றிவிட்டான்’ என்பார்கள். சிலர் ‘இந்த ஏரியாவில் திருட்டு ஜாஸ்தி. கொலை, கொள்ளை எல்லாம் சகஜமா நடக்குதாம். வீட்டை நல்லாதான்யா கட்டியிருக்கிறாய். ஆனால் பாதுகாப்பான இடம் பார்த்து இதை கட்டியிருக்கலாமே!’ என்பார்கள்.

    இப்படி உதிர்க்கப்படும் வார்த்தைகளில் கொஞ்சமாவது பொறாமை கலந்திருக்கத்தான் செய்யும். இதை நினைத்து வருத்தப்படவேண்டிய தேவையில்லை.

    பொண்ணுக்கு கல்யாணம் :


    ‘பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சா? இனிமேதான் உனக்கு பெரிய கண்டம் இருக்கு. இதோட முடிஞ்சிப் போகல. போகப் போக செலவழிச்சிக்கிட்டே இருக்கணும். நீ எவ்வளவு செலவழிச்சாலும் யாருக்கும் திருப்தியே இருக்காது. பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுன்னா சும்மாவா!’ என்று ஒருசிலர் பயமுறுத்தி, பொறாமையை வெளிப்படுத்தலாம்.

    பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்தை அவர் ஒரு நிமிஷம்கூட அனுபவிக்கக்கூடாது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு, பொறாமையை கொட்ட வருவார்கள். அவர் களிடம் சிரித்துக்கொண்டே ‘கல்யாணத்திற்கு மறந்திடாமல் வந்திடுங்க’ என்றுகூறி வழியனுப்பிவைக்க வேண்டியதுதான்.
    Next Story
    ×