search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரகசியத்தை விற்கும் வாட்ஸ் அப்?
    X

    ரகசியத்தை விற்கும் வாட்ஸ் அப்?

    பாதுகாப்பான படுகொலை என்று ஒன்று இல்லாதது போல, பாதுகாப்பான இணையப் பயன்பாடு என்பதும் இல்லை.
    சில மாதங்களாக வாட்ஸப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த ஒரு செய்தி, தகவல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ‘வாட்ஸப் தகவல்களை எல்லாம் பேஸ்புக் எடுத்துக் கொள்ளப் போகிறது’ எனும் அச்சம். இந்த அச்சம் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் நிறுவனத்தை 2014-ல் வாங்கியதில் இருந்தே மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது தான்.

    சமீபத்தில் வாட்ஸப் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டது. தன்னை விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்துக்கு தன்னிடமிருக்கும் தகவல்களைக் கொடுக்கப் போகிறேன் என்பது தான் அது. இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லை. இரண்டு நிறுவனங்கள் இணையும் போது அதற்கிடையே வெகு சகஜமாய் நடக்கும் பரிவர்த்தனை தான் இது. இதை ‘மெர்ஜர் ஸ்ட்ராடஜி’ என்பார்கள்.

    இன்னும் சொல்லப்போனால் பேஸ்புக் நிறுவனம், வாட்ஸப்பை வாங்கியதன் முக்கிய நோக்கமே பயனர்களின் தகவல்கள் தான். சுமார் 500 மில்லியன் பயனர்கள் வாட்ஸப்பில் இருக்கிறார் கள். பேஸ்புக் தளம் சுமார் 1.71 பில்லியன், அதாவது வாட்ஸப்பை விட மூன்று மடங்குக்கு மேல் அதிக, பயனர்களுடன் இருக்கிறது.

    ஆனால், ‘ரகசியம் காப்பேன்’ என உறுதி மொழி தந்த வாட்ஸப் வாக்கு மாறிவிட்டது என கொதித்துப் போய்விட்டார்கள் பயனர்கள். அதனால் தான் நிறுவனத்தை சட்டபூர்வமாக சந்தித்தார்கள். வாட்ஸப் நிறுவனம் நெருக்கடிக்கு ஆளானது. எனவே தகவல்களை அப்படியே பேஸ்புக்குக்கு அள்ளிக் கொடுக்காமல் பயனர்களுக்கு ஒரு ஆப்ஷனை கொடுத்தது. ஒரு மாத காலம் அவகாசம். அதற்குள் தகவலை பயன்படுத்த வேண்டாம் என்பவர்கள் அதை ஒரு வாட்ஸப் அப்ளிகேஷனில் ஒரு ‘கிளிக்’ மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்தது.

    அந்த வாய்ப்பும் செப்டம்பர் 25-ம் தேதியுடன் முடிந்து விட்டது. ‘என்னைத் தொடக்கூடாது’ என நிபந்தனை விதித்தவர்கள் தவிர மற்றவர்களுடைய தகவல்களில் சில இனிமேல் பேஸ்புக் தளத்துக்கு அனுப்பப்படும். அதுமட்டுமல்ல, பேஸ்புக் நிறுவனத்தோடு இணைந்திருக்கும் வேறு சில நிறுவனங்களும் அந்தத் தகவல்களை பயன்படுத்த முடியும்.

    பதற்றமடையும் முன் ஒரு விஷயம்... “நீங்கள் அனுப்புகின்ற செய்திகளையோ, நீங்கள் அனுப்பும் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வாட்ஸப் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்காது. எனவே ‘ஐயையோ என்னென்னவோ பேசிட்டேனே.. ஏதேதோ வீடியோ அனுப்பிட்டேனே.. என்னாகப் போகுதோ’ என பயப்பட வேண்டிய அவசியம் இல்லை”.

    உங்களுடைய தொலைபேசி எண், அதுதான் மிக முக்கியமான தகவல். அது பேஸ்புக் கைக்குப் போகும். உங்கள் மின்னஞ்சல் முகவரி, உங்களுடைய வாட்ஸப் பயன்பாடு நேரம் போன்ற சில தகவல்களையும் பேஸ்புக் பெற்றுக்கொள்ளும். மற்றபடி நாம் அனுப்புகின்ற தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை நிச்சயம் பகிரப்பட மாட்டாது என உறுதியளிக்கின்றனர் வாட்ஸப் நிறுவனத்தினர், நம்புவோம்.

    நம்முடைய போன் நம்பரை வைத்து என்ன தான் செய்வார்கள் என்பது பலருடைய மனதில் எழுகின்ற சந்தேகம். இன்றைய உலகம் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. அதிலும் ‘ஆன்லைன் வர்த்தகம்’ எப்போதும் இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

    இந்த டிஜிடல் உலகில், டிஜிடல் விளம்பரங்களுக்கு, இத்தகைய தகவல்கள் பெரிய உதவியாய் இருக்கின்றன. பிக் டேட்டா நுட்பத்தின் அடிப்படை இத்தகைய தகவல்கள் தான். இத்தகைய தகவல்களின் கூட்டுத் தொகையில் தான் பெரிய பெரிய நிறுவனங்களே இயங்குகின்றன.

    உதாரணமாக, உங்கள் மொபைலில் இப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸப் இரண்டுமே இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு இரண்டுமே தனித்தனியாய் இயங்கும். வாட்ஸப் உங்கள் இருப்பிடம், உங்கள் தேடுதல், உங்கள் ரசனை போன்றவற்றைப் பதிவு செய்யாது. ஆனால் பேஸ்புக் அவற்றையெல்லாம் பதிவு செய்து கொண்டே இருக்கும். இரண்டும் இணையும் போது, நீங்கள் மதுரை போய் இறங்கியதும், ‘மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது, வாங்க ..... மெஸ்ல போய் சாப்பிடலாம்’ என வாட்ஸப்பில் விளம்பர மெசேஜ் வரலாம்!

    இதுவரை விளம்பரங்களே இல்லாமல் இயங்கி வந்த வாட்ஸப் இனிமேல் விளம்பரங்களோடு கைகோக்கும். எப்படியோ, லாபம் இல்லாமல் எந்த நிறுவனமும் இயங்காது என்பதை மட்டும் மனதில் வைத்திருந்தால் போதும்.

    சர்வதேச அளவில் இந்த விஷயம் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்கள், தனிநபர் விஷயங்கள் போன்றவற்றை வாட்ஸப் எப்படியெல்லாம் பயன்படுத்தப் போகிறது என்பதை கண்காணிக்கப் போவதாக இங்கிலாந்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பு அறிவித்திருக்கிறது.

    ‘தகவலைப் பகிர விரும்பவில்லை’ என தேர்வு செய்திருப்பவர்களின் தகவல்கள் பரிமாறப்படக் கூடாது என இந்தியா வலியுறுத்தியிருக்கிறது. பிற நாடுகளும் இந்த மாற்றத்தை கவனித்துக் கொண்டிருக்கின்றன.

    கடைசியாக ஒரே ஒரு விஷயம்- ‘டிஜிடல் உலகில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை. ஒரு தகவலை நீங்கள் ஒரு தளத்தில் பதிவு செய்தால் அதை யாரும் எடுக்கமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாதுகாப்பான படுகொலை என்று ஒன்று இல்லாதது போல, பாதுகாப்பான இணையப் பயன்பாடு என்பதும் இல்லை. எனவே இணையம் சார்ந்த பகிர்வுகளில் சென்சிடிவ் விஷயங்களை அறவே தவிர்ப்பது நல்லது’.

    ஒவ்வொரு ஆப் இன்ஸ்டால் செய்யும் போதும் அது உங்களுடைய அனுமதியைக் கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்தால் தான் ஆப் மொபைலில் நிறுவப்படும். எனவே ‘ஆம்’ கொட்டுவீர்கள். அது உங்களை அறியாமலேயே உங்கள் தகவல்களைச் ‘சுட்டு’ இன்னொரு சர்வரில் கொட்டும். எனவே தேவையற்ற ஆப்ஸ்களை நிறுவாதீர்கள்.

    உங்கள் மொபைல் நம்பர், சரியான விலாசம், குடும்ப விவரங்கள், சரியான பிறந்த நாள் போன்றவை எதையும் கொடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. மொபைல் நம்பர் இல்லாமலேயே வாட்ஸப்பை நிறுவ முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    அப்படி உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் தோன்றும் ஆப்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் ‘டெலீட்’ செய்து விடுங்கள், சிம்பிள்.

    வாழ்க்கை என்பது டிஜிடல் சிறையில் கிடப்பதல்ல, உறவுகளின் அன்புப்பிடியில் திளைப்பதே. அதை நினைவில் கொள்ளுங்கள்.

    எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் உண்டு. தீமை விலக்கி நன்மை அருந்தி வாழ்ந்தால், சிக்கல் இல்லாத ஆனந்த வாழ்க்கை சாத்தியம்.
    Next Story
    ×