search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு
    X

    டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு

    டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்‌ஷன் போன்ற பலவிதமான தோல் வியாதிகள் டாட்டூ மூலம் உருவாகும். எச்.ஐ.வி., ஹெப்டய்டிஸ்-பி போன்ற வியாதிகளும் ஏற்படலாம்.
    உடலில் பல்வேறுவிதமாக உருவங்களைத் தீட்டும் ‘டாட்டூ’ கலாசாரம் இளைஞர்களிடையே வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. பச்சைக்குத்திக்கொள்வதின் நவீன வடிவமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் டாட்டு கலாசாரத்திற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் வித்தியாசமான உருவங்களையும், தங்களுக்கு பிடித்தமானவர்கள் பெயர்களையும் சருமத்தில் பதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் அழகைவிட ஆபத்தே அதிகம் என்கிறார்கள்.

    பச்சைக்குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்கவழக்கம். அந்தக்காலத்து பெண்கள் கணவர் பெயரை சொல்லமாட்டார்கள். அதற்கு பதிலாக கைகளில் கணவர் பெயரை பச்சைக் குத்தி வைத்துக்கொள்வார்கள். யாராவது கணவர் பெயரைக் கேட்டால் அதை காட்டுவார்கள். அந்த காலத்தில் வளையல், மாங்கல்யம், மருதாணி போல பச்சைக் குத்துதலும் ஒரு மங்களகரமான விஷயமாக கருதப்பட்டது.

    திருமணம் பேசி முடித்த பெண்ணுக்கு கணவர் பெயரை பச்சைக் குத்துவது பாரம்பரிய வழக்கமாகவும் பின்பற்றப்பட்டது. அது திருமணச் சடங்குகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது. அப்படி நடைமுறையில் இருந்து வந்த வழக்கம், பிற்காலத்தில் டாட்டூவாக உருமாறி இருக்கிறது.

    இந்த மோகம் இளைஞர்களிடம் உருவாக சினிமா நடிகர்- நடிகைகள் முக்கிய காரணம். அவர்கள் தங்கள் காதலையும், அன்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை உடலில் பதித்துக்கொண்டார்கள். நடிகர் சஞ்சய் தத், மான்யதாவை காதலிக்க ஆரம்பித்ததும் அவர் செய்த முதல் காரியம் அவர் பெயரை நெஞ்சில் டாட்டூவாக பதித்துக்கொண்டதுதான். தன்னுடைய காதல் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக அவர் கையில் எடுத்த அஸ்திரம் அது.

    சைய்ப் அலிகான், கரீனாவை காதலிக்க ஆரம்பித்தவுடன் அவருடைய பெயரை பச்சை குத்திக்கொண்டார். தீபிகா, ரண்பீர் கபூரின் பெயரை கழுத்தில் பதிவு செய்துகொண்டார்.



    பெயரை மட்டுமல்ல மனதிற்கு பிடித்தமான விஷயங்களையும் உடலில் பதித்திருக்கிறார்கள். கங்கனா ரணாவத் தன்னுடைய முக்கியமான வெற்றியை நினைவுச் சின்னமாக பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறார். பிரியங்கா சோப்ரா தன்னுடைய அப்பாவின் பெயரை பொறித்திருக்கிறார். நடிகர் ஜான் ஆப்ரகாமும் டாட்டூ பிரியர்தான். இப்படி பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து இன்றைய இளைஞர்களும் இஷ்டத்திற்கு தங்கள் உடலை சுவர்போன்று கருதத்தொடங்கிவிட்டார்கள். கண்டதையும் தங்கள் சருமத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

    இளைஞர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அழகுக்கலை நிபுணர்கள் விதவிதமான டாட்டூக்களை வரைந்து அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். நண்பர்கள் ஒருவருக்கொருவர் அதைப் பார்க்க, பலருக்கும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இளைஞர்களின் இந்த டாட்டூ மோகம் மருத்துவ உலகை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. இந்தப் பழக்கம் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    “டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்‌ஷன் போன்ற பலவிதமான தோல் வியாதிகள் டாட்டூ மூலம் உருவாகும். எச்.ஐ.வி., ஹெப்டய்டிஸ்-பி போன்ற வியாதிகளும் ஏற்படலாம்” என்பது மருத்துவர்களின் விளக்கமாக இருக்கிறது.

    டாட்டூக்கள் நோய் பாதிப்பை எப்படி உருவாக்குகின்றன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். டாட்டூக்களை உடலில் பதிவுசெய்ய சுத்திகரிக்கப்பட்ட ஊசியை யாரும் பயன்படுத்துவதில்லை. முக்கியமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசிகளை உபயோகிப்பதில்லை. அதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அக்கறை காண்பிக்கும் இளைஞர்கள்கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். அது அவர்கள் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு போய்விட்டுவிடக்கூடியதாக ஆகிவிடுகிறது. ஊசிகள் தவிர பயன்படுத்தப்படும் வண்ணமும் தரமானதாக இருக்கவேண்டும். பளிச்சென்று தோன்றவேண்டும் என்பதற்காக அதில் பல ரசாயனப் பொருட்களையும் கலக்கிறார்கள். அது தோலின் வழியாக உள்ளேசென்று மற்ற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.

    இதுபற்றி போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. டாட்டூ குத்துபவர்களை கண் காணிக்கும் முறையும் இல்லை. நிறைய பேர் ஒரு ஊசியும், கொஞ்சம் வண்ணமும் வைத்துக்கொண்டு டாட்டூ மோகம் கொண்டவர்களை வசீகரித்து, தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.



    டாட்டூ பதிக்க விரும்பும் இளைஞர்கள் தங்களுக்கு தனித்தனியாக புதுப்புது ஊசிகள் பயன்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். பயன்படுத்தப்படும் வண்ணங்கள் எத்தகைய மூலப்பொருட் களால் ஆனவை என்பதையும், அவைகளில் ரசாயன கலப்பு இருக்கிறதா என்பதையும் தெளிவாக அறியவேண்டும். டாட்டூ நிபுணர்களின் முன்அனுபவம் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். ஊசி பிடிக்கத் தெரியாதவர்கள்கூட உடலில் குத்த ஆரம்பித்துவிட்டால், உடல்வலிதான் மிச்சம். டாட்டூ குத்துபவர்கள் கையுறைகளை அணிந்து கொள்ளவேண்டும். கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். இதிலெல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு அழகைவிட ஆரோக்கியம் முக்கியம் என்ற உணர்வு எப்போதும் இருந்துகொண்டிருக்கவேண்டும்.

    வெளிநாடுகளில் இந்தியாவைவிட அதிக அளவில் டாட்டூ பார்லர்கள் இருக்கின்றன. ஆனால் இது ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்பதால், அங்கு டாட்டூ பார்லர்கள் நடத்த அரசு உரிமம் முக்கியம். பயன்படுத்தப்படும் பொருட்களைப் பற்றிய விவரங்களும் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்போகும் வண்ணங்களை அமெரிக்க பார்லர்கள் ‘புட் அண்ட் ட்ராக் அட்மினிஸ்ட்ரேஷன்’ அமைப்பிடம் காட்டி சான்றிதழ் பெறுகிறார்கள். அங்கு பொதுமக்கள் உடல் நலத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    காதலிக்கும் பலர், தங்கள் இணையின் மீது இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையில் அவர்கள் பெயரை சருமத்தில் பதித்துக்கொள்கிறார்கள். ஆனால் அந்த காதல் கை கூடாதபோதோ, வேறு காரணங்களுக்காகவோ அதனை அழிக்க நினைக்கிறார்கள். அப்போது நினைத்த நேரத்தில் அவர்களால் அதை அழிக்க முடிவதில்லை. எப்படி அழிப்பது, அதற்கு என்ன தொழில்நுட்பம் இருக்கிறது என்று தெரியாமல் தவித்துப்போகிறார்கள்.

    ‘லேசர் தெரபி‘ மூலம் டாட்டூ பதிவை அழித்துவிடலாம். எனினும் இந்த முறையை கையாளும்போது வலி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அப்போது நோய்த்தொற்று ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. அதனால் இந்த அழிப்பு வேலையை மிக கவனமாகவே செய்யவேண்டியதிருக்கிறது.
    Next Story
    ×