search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்
    X

    அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்

    இப்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் பற்றி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    அதிகாரம் ஒரு சுமை

    பெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்... அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக்கானதாக்குகிறது.

    கட்டுப்பாடு அவசியம்

    உணவு விஷயத்தில் சரிவிகிதச் சமச்சீர் உணவு சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அலுவலகம் செல்லும்போது அவசர அவசரமாக உணவை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடியவர்கள், ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைப்பதால் விதவிதமாக சமைக்கச் சொல்லி சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இந்த வயதில் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சாதாரணமாக, வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு 2225 கலோரி முதல் 2500 கலோரி வரை தேவைப்படலாம். ஆனால், வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 1800 முதல் 2000 கலோரியே போதுமானது. அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 1875 முதல் 2000 கலோரி வரை தேவைப்படலாம். ஓய்வுபெற்ற பிறகு 1600 முதல் 1800 கலோரி வரை (ஆண்களைவிட பெண்களுக்கு சில கூடுதல் வேலைகள் இருப்பதால்) தேவைப்படலாம்.

    இரைப்பையின் வேலையைக் குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இனிப்பு, காரம், உப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்ளுங்கள்.  

    பரிசோதனையின் பலன்கள்

    பெரும்பாலான நோய்கள் வெளியில் தெரிவதற்கே அதிக நாட்கள் ஆகும். அப்படி வெளியில் தெரியாமலேயே இருந்துவிட்டுத் திடீரென ஒருநாள் வெளிப்படும். எனவே, வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எந்தெந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியேத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.

    மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்

    சிலருக்குப் பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ அல்லது இரண்டுமோ இருக்கலாம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களினால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த வயதிலும் அவற்றைத் தொடர்ந்துகொண்டிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகி, குணப்படுத்த முடியாதபடி பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.

    இயற்கையே சிறந்த மருந்து

    மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், இது மற்றவர்களைவிடவும் முதிர் வயதினருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

    நிம்மதி தரும் நிதி

    முதுமைக் காலத்தை நிம்மதியுடன் கழிக்கப் பொருளாதாரமும் காரணமாக அமைகிறது. எனவே, பணியில் இருக்கும்போதே ஓய்வு காலத்துக்கு என தனியாகச் சேமித்து வையுங்கள். இதனால், 'அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவையில்லை’ என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக வீட்டில் உள்ளவர்களிடம் கையேந்தாமல் உங்களிடம் இருக்கும் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்!
    Next Story
    ×