search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிள்ளைகளின் நினைவுத் திறனை மீட்கலாம்
    X

    பிள்ளைகளின் நினைவுத் திறனை மீட்கலாம்

    படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்.
    படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்து போய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள். ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்

    இரவில் பாடம் படித்த பின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.

    மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.

    கணக்குப் பாடங்களைப் படிக்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கிற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.

    இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.



    ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.

    பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அந்த கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும், அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்பு முறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும்.

    முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.

    நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.

    படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்று படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். ஆகவே, படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.
    Next Story
    ×