search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எந்திரத்தனமான வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு
    X

    எந்திரத்தனமான வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு

    மாறிவரும் எந்திரத்தனமான வாழ்க்கை முறை குழந்தைகள் உலகிலும் சுமைகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளின் மனச்சோர்வு 10 ஆண்டுகளுக்குள்ளாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    குழந்தைப்பருவமே மகிழ்ச்சி நிறைந்தது என்பது பெரியவர்களின் எண்ணம். மாறிவரும் எந்திரத்தனமான வாழ்க்கை முறை குழந்தைகள் உலகிலும் சுமைகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளின் மனச்சோர்வு 10 ஆண்டுகளுக்குள்ளாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்று (ஏப்ரல்-7) உலக சுகாதார நாள். மனச்சோர்வு பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த தினத்தை கடைப்பிடிக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மழலைகளையும், மற்றவர்களையும் வாட்டும் மனச்சோர்வு பற்றிய சங்கதிகளை இந்த வாரம் அசைபோடுவோம்...

    * உலக சுகாதார நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று தொடங்கப்பட்டது. அந்த தினமே சுகாதார தினமாக, 1950 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், வெவ்வேறு மையப்பொருளை வலியுறுத்தி சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘டிப்ரஸ்ஸன்’ எனப்படும் மனச்சோர்வு, மையப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

    * மனச்சோர்வு என்பது ஒருவகை மனப் பிறழ்ச்சி நோய். உலகில் சுமார் 40 கோடி மக்கள் மனச்சோர்வு பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

    * சிறியவர்கள், பெரியவர்கள் என வயது பேதமில்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடியது மனச்சோர்வு நோய். பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நாம் மனச்சோர்வு எனும் ஒருவகை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாது.

    * மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20-25 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 2009-ல் 8 சதவீதமாக இருந்தது தற்போது சுமார் 2½ மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    * குழந்தைகளுக்கு 80 சதவீத மனச்சோர்வு நண்பர்கள் மற்றும் உறவுகளாலேயே ஏற்படுகிறது.

    * மனச்சோர்வு குழந்தைகளை பல விதங்களில் பாதிக்கும். உணவு, கல்வி, பழக்க வழக்கங்கள், நடத்தைகள், சமூகத்துடன் இணக்கமாக பழகுதல் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வியில் பின்தங்கும் நிலையும், மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.



    * மனச்சோர்வு அதிகரிக்கும் போது மற்ற மன பாதிப்புகளும் தொற்றத் தொடங்கிவிடும். தற்கொலையை தூண்டும் கொடிய வியாதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    * மனச்சோர்வினால் ஆண்டு தோறும் சராசரியாக 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இதில் 15 முதல் 29 வயதுடையவர்கள் மிகுதி என்பது இன்னும் கவலை அளிக்கக்கூடியதாகும்.

    * 17.3 சதவீத இளம் பெண்களும், 5.7 சதவீத இளைஞர்களும் மனச்சோர்வு பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

    * கேளிக்கையில் விருப்பமின்றி இருப்பது, சுறுசுறுப்பு, உற்சாகமின்றி செயல்படுவது, கவலை ரேகைகள் முகத்தில் தெரிவது, தூக்கம் குறைந்து தவிப்பது, பசியின்மை, குற்ற உணர்வுடன் தவித்தல், மனம் அலைபாய்தல், தன்னம்பிக்கையின்றி பேசுதல், நினைவாற்றல் தடுமாற்றம் மற்றும் கவனக்குறைவு போன்றவை மனச்சோர்வு பாதிப்பின் அறிகுறிகளாகும். சாதாரணமாக தோன்றும் இந்த அறிகுறிகள் விபரீத விளைவுகளை உருவாக்கும் மனநோயாக மாறலாம்.

    * இன்றைய காலத்தில் மனச்சோர்வு வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் சிகிச்சையளிப்பது மிக எளிது.

    * பழக்க வழக்க மாற்றம், சூழல் மாற்றம், அன்பு பாராட்டுதல், மருந்து உட்கொள்ளுதல் மற்றும் மருந்தில்லா மனமாற்றப் பயிற்சிகள் மூலம் மனச்சோர்வுக்கு பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    * உலக சுகாதார நிறுவனமும் ‘மென்டல் ஹெல்த் கேப் ஆக்சன் புரோகிராம்’ (mh-G-AP) எனும் திட்டத்தின்படி அரசுகள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பலவிதமான விழிப்புணர்வு முகாம்கள், சிகிச்சை முகாம்கள், பிரசாரங்கள் மேற்கொண்டு வருகிறது.

    * மனச்சோர்வின் முக்கிய துணைவன் தனிமையே. தனிமையை விரட்டினால் மனச்சோர்வு பெரும்பாலும் நீங்கிவிடும். மற்றவர்களுடன் ஒன்றாக இருப்பது, ஒற்றுமையாக செயல்படுவது, விட்டுக்கொடுத்தல், உதவுதல், உணர்வுப் பகிர்வு ஆகியவை மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்கும்.

    * மனதுக்குப் பிடித்த இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். டி.வி., இணையதளங்களில் சிரிப்பு-வேடிக்கை நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
    Next Story
    ×