search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்கள் மொழிப்புலமையை வளர்த்து கொள்ள வேண்டும்
    X

    மாணவர்கள் மொழிப்புலமையை வளர்த்து கொள்ள வேண்டும்

    மாணவர்கள் மொழிப்புலமையை வளர்த்துக் கொள்ள சரியாகவும், தெளிவாகவும், தடுமாற்றம் இன்றியும் பேச முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    மொழி தான் ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை காக்க மொழி தன் வளம் மாறாமல் செழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கு தாய்மொழியை சரியாக உச்சரித்து பேசுவதையும், பிழையின்றி எழுதுவதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். மொழியில் சிதைவு ஏற்படுவதற்கு நாமே காரணமாகி விடக்கூடாது. மொழிக்குரிய சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு சங்க இலக்கியங்கள், மொழியின் தொன்மையை படிக்க வேண்டும். அதில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    தாய்மொழியை நல்ல முறையில் கற்றுக்கொள்ளும் போது தான் பிறமொழிகளையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். தாய்மொழி வழியில் கற்றுக்கொள்வது தான் சிந்தனையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே, ஒருவனின் கற்கும் திறனும், அதை வெளிப்படுத்தும் திறனும் சிறந்த வகையில் வெளிப்படுவதற்கு காரணமாக இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் வலிமை மிகுந்தவை தான். அதை புரிந்து கொண்டு சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் வார்த்தைகளை தவறாக பயன்படுத்தினால் அதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

    எனவே வார்த்தைகளை பயன்படுத்தும் போது சரியாக பேசவும், எழுதவும் வேண்டும். வார்த்தையில், ஒரு எழுத்து தவறாக இருந்தாலும் அர்த்தம் மாறிவிடும். மேலும் அது தவறான பொருள் தருவதாக அமைந்து விடும்.



    இதில் வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் காலம், களம், பழம் என்று ‘ழகர’ எழுத்துகளை பயன்படுத்தும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். பிழையின்றி பேசுவதும், எழுதுவதுமே ஒருவன் மொழிக்கு செய்யும் மரியாதை ஆகும். மொழி என்பது ஒருவருடன் தொடர்பு கொள்ள பயன்படும் வெறும் சாதனம் அல்ல. அது ஒருவரின் வாழ்வியல் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அம்சம் ஆகும். எனவே மொழி என்பது மிக உயர்ந்த ஆயுதம். அதை சரியாக பயன்படுத்தினால் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியும். அந்த உயரத்தையும் அடைய முடியும்.

    எனவே மொழிப்புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரியாகவும், தெளிவாகவும், தடுமாற்றம் இன்றியும் பேச முயற்சி மேற்கொள்ள வேண்டும். உலகில் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் மொழி அறிவு உள்ளவர்கள் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இளைஞர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் மொழியை அர்த்தம் தெரிந்து ஆழமாக படிக்கவேண்டும்.

    அது மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு உலகத்தை பெரிய அளவில் திறந்து வைக்கும். எனவே மொழிப் பாடங்களையும் மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க வேண்டும். ஒருவனுக்கு எத்தனை மொழி தெரிகிறதோ அத்தனை மனிதனாக கருதப்படுவான். எனவே எந்த மொழியையும் நல்ல முறையில் கற்றுக் கொண்டு சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். அதுவே மொழி சிறக்கவும், கற்றவன் வளம் பெறவும் உதவும்.
    Next Story
    ×