search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்கள் பாடம் படிக்க ஏற்ற நேரம்
    X

    மாணவர்கள் பாடம் படிக்க ஏற்ற நேரம்

    கல்வியே கண்கண்ட கடவுள் என்ற நிலையில் கற்பதில் போட்டி கணக்கின்றி நடக்கிறது. ஆனால், தினமும் படிக்க ஏற்ற நேரம் என்பது மட்டும் ஒரு கேள்விக்குறியாக இன்னும் இருக்கிறது.
    ஒருவருக்கு எந்நேரம் சரியாக இருக்கிறதோ அதை அவர் பின்பற்ற வேண்டும். வேறொரு நேரத்தைப் பின்பற்ற வற்புறுத்துதல் தவறு. உங்களுக்கு எந்நேரமும் சரியெனத் தோன்றினால், இரவில் 10 மணிவரை நன்றாகப் படித்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். காலையிலும் 5 மணிக்கு எழுந்து, படித்தவற்றை நினைவுகூர்ந்தால் அல்லது மீதியிருப்பதைப் படித்தால், அது வகுப்பில் ஆசிரியர் கேட்கும்போது உதவுவதோடு அடுத்த பாடத்திலும் தொடர்ந்து பயணிக்கக் கைகொடுக்கும்.

    “ஆன்ட்டி... எனக்குக் காலையில் படிக்கிறதுதான் ரொம்பப் பிடிக்கும். நாலு மணிக்கே அம்மா என்னை எழுப்பிவிட்டுடுவாங்க ஆன்ட்டி.” எட்டாம் வகுப்புப் படிக்கும் ராக்கோழியான தன் மகனின் வகுப்புத் தோழி சொன்னதிலிருந்து லட்சுமியின் மனதில் ஓர் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. ‘படிப்பதற்கு ஏற்ற நேரம் எது?’ என்ற கேள்விக்கு அவள் மனதில் எழும்பிய சுனாமி எண்ணங்களால் ஒரு பெருங்கடலையே உருவாக்கமுடியும். இத்தனைக்கும் இருவருக்கும் ஒரு சில மதிப்பெண்கள் மட்டுமே வித்தியாசம் என்றாலும், இன்றைய சூழலில் நம் நாட்டில் அந்த ஒரு சில மட்டும்தானே பல மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கின்றன.

    எதைச் செய்ய வேண்டுமானாலும், அதற்கென ஒரு நேரம் இருக்கிறது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது வழக்கு. ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழையால் ஆற்றில் புதுநீர் புரண்டோட, அதுவே பயிரிடுவதற்கு ஏற்ற பருவம் என்பதை இது குறிக் கிறது.

    அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்தால் நாள் முழுவதும் உடலிலும், உள்ளத்திலும் ஒரு சக்தி நிறைந்திருப்பதை உணரலாம். அதையே கடின உழைப்பின் கடைசியில் மாலையில் செய்தாலும், இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்து அடுத்த நாளை உற்சாகத்தோடு தொடங்கலாம். ஏதோ ஒருவகையில், எப்பொழுது செய்தாலும் உடற்பயிற்சி உகந்தது என்பது மட்டும் உண்மை.

    ‘இளமையில் கல்’ என்பது கூட இன்று கணினியுலகில் ‘முதுமையிலும் கல்’ என மாறிவிட்டது. ஐந்து வயதில் தாய்மொழியையே சரியாகக் கற்காதவர்களும் ஐம்பதில் புதுப்புது கணினி மொழிகளையும் தொழில்நுட்பங்களையும் கற்பதைப் பார்க்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது என்றுகூடச் சொல்லலாம். பகலவனின் ஒளியை நம்பி பகலில் மட்டும் உழைத்தவர்களை இரவிலும் வேலைசெய்ய வைத்தது மின்விளக்கு. இணையமோ இந்தியாவின் இரவையும் அமெரிக்காவின் பகலையும் ஒன்றாக்கி நேரத்தையே கேள்விக்குறியாக்கி நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    கல்வியே கண்கண்ட கடவுள் என்ற நிலையில் கற்பதில் போட்டி கணக்கின்றி நடக்கிறது. ஆனால், தினமும் படிக்க ஏற்ற நேரம் என்பது மட்டும் ஒரு கேள்விக்குறியாக இன்னும் இருக்கிறது. பெற்றோர்களிடம் கேட்டால் 24 மணி நேரமும் என்பார்கள்; அதையே ஆசிரியர்கள் 48 மணி நேரம் என்பார்கள். ‘கணிதத்தில் கடன் வாங்குவதைப்போல எங்கிருந்து வேண்டுமானாலும் நேரத்தை வாங்கு’ என்பார்கள். ஆனால், பல மாணவர்களோ தேர்வுக்கு முந்தைய நாள் அல்லது படிப்பு விடுமுறைதான் தேர்வுக்குப் படிக்கும் நேரம் என்று சொல்வார்கள். கல்வி என்ற முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக இருப்பவர்களே மூன்று கோணங்களில் மாறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

    தினமும் படிக்கவேண்டிய பாடத்தைப் படிப்பு விடுமுறைவரை காத்திருக்க வைப்பது எத்தனை முட்டாள்தனம்! நாளும் மூன்றுவேளை உண்ணவேண்டியதைச் சேர்த்துவைத்துத் தூங்கும்முன் உண்ணமுடியுமா? அப்படி உண்டாலும், உடல் தாங்குமா? உடலில் தங்காமல் போகுமே! அவ்வப்போது அளவோடு உண்டால் ஆயுளும் கூடும். எனவே, தினமும் படிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது; இருக்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு நாளும் வீட்டில் படிப்பதற்கு ஏற்றநேரம் எது என்பதில்தான் ஒரு தெளிவான ஒன்றுபட்ட சிந்தனையில்லை.

    குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவரும் முன்னரே அன்றைய ஹோம்வொர்க் பற்றிய விவரம் பெற்றோரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்துவிடுகிறது. ‘இன்று உன் நாள் எப்படி இருந்தது? மதிய உணவை முழுவதும் முடித்தாயா? ஜூஸ் குடித்தாயா?’ போன்ற சிறுசிறு விசாரிப்புகள்கூட இன்றி ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான இண்டர்வியூ நடத்துவதுபோல வீட்டுப்பாடம் பற்றிக் கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர். அதுவும் ஒரு குழந்தை உள்ள வீடென்றால் அக்கறை என்ற பெயரில் அதை அக்கரைக்குத் தள்ளிவிடுகின்றனர்.



    ‘இரவு எந்நேரமானாலும் பரவாயில்லை; வீட்டுப்பாடம் எல்லாம் முடித்துவிட்டுத் தூங்கு’, எனச்சொல்லி தானும் தூங்காமல், குழந்தைகளையும் தூங்கவிடாத பெற்றோர் ஒருவகை என்றால், ‘படிக்கும்போது தூங்கிவிழாமல் போய்த் தூங்கு; காலையில் 4 மணிக்கு எழுந்து படி’ எனச்சொல்லி அவர்களை அலாரம் கடிகாரமாக அலறவைக்கும் பெற்றோர் இன்னொரு வகை. பின்னிரவா, முற்காலையா என்பதில் மாணவனின் விருப்பம் என்ன என்பது மட்டும் எங்கும், எப்போதும் மறுக்கப்படுகிறது.

    ஒருவரால் இரவு 12 மணி என்றாலும் ஆந்தையைப் போல களைப்பின்றி, சுறுசுறுப்பாக வேலை செய்யவோ அல்லது படிக்கவோ முடியும். அவர் கண்ணை மூடினாலும் தூக்கம் வருவதில்லை. ஆனால், இன்னொருவருக்கோ 9 அல்லது 10 மணி ஆனவுடனே கடிகாரத்தின் ஊசல்குண்டு போல அவரின் தலை மேலும் கீழும், பக்கவாட்டிலும், முன்னும்பின்னும் ஆடத்தொடங்கும். ஆனால், காலையில் காற்றடித்த பந்துபோல படுக்கையில் இருந்து துள்ளி எழுவர்.

    நல்ல தூக்கத்துக்குப்பின் அதிகாலையில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருப்பதுடன், மனமும் அமைதியாகவும் புத்துணர்வோடும் இருக்கும். ஒரு வெற்றுக்காகிதத்தில் கதை, கவிதை, ஓவியம் என எதை வேண்டுமானாலும் பதிவிட முடியும் என்பதைப்போல, இந்நேரத்தில் எதைப் படித்தாலும் மனதில் எளிதில் தங்கும் எனப் பலரும் நம்புகின்றனர். மாறாக, பகல் முழுவதும் பள்ளியில் கடின உழைப்புக்குப்பின் இரவில் நெடுநேரம் விழித்துப் படித்தால், மூளையும் களைப்போடு இருப்பதால், படிப்பது எதுவும் புரியாமல் மனதிலும் பதியாது என சிலர் நம்புகின்றனர். அதனால் தம் குழந்தைகளைக் காலையில் எழுப்பிவிட்டு படிக்க வைக்கின்றனர்.

    அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ததில் இரண்டு நேரமுமே ஏற்றது எனத் தெரியவந்துள்ளது. இரவில் மூளை சோர்வாக இருக்கும்போது இன்னும் சிறப்பாக வேலைசெய்கிறது என அறிஞர்கள் கூறுகின்றனர். சோர்வான மூளை, கவனச்சிதறல்களை வடிகட்டி கவனம் செலுத்த இயலாததாலும், ஆழ்மனதின் பழையவற்றை ஞாபகப்படுத்த முடியாததாலும், புதுச் சிந்தனைகளுக்கும், வழிமுறைகளுக்கும் இரவுநேரம் வழிவகுக்கிறது. அதோடு, கற்றவையாவும் உறக்கத்தின்போது உணர்மனதிலிருந்து நெறிப்படுத்தப்பட்டு ஆழ் மனதில் சேமிக்கப்படுகின்றன. எனவே, ஒருவருக்கு எந்நேரம் சரியாக இருக்கிறதோ அதை அவர் பின்பற்ற வேண்டும். வேறொரு நேரத்தைப் பின்பற்ற வற்புறுத்துதல் தவறு. கொக்கரிக்கும் கோழி ஆந்தையாகாது!

    உங்களுக்கு எந்நேரமும் சரியெனத் தோன்றினால், இரவில் 10 மணி வரை நன்றாகப் படித்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். காலையிலும் 5 மணிக்கு எழுந்து, படித்தவற்றை நினைவுகூர்ந்தால் அல்லது மீதியிருப்பதைப் படித்தால், அது வகுப்பில் ஆசிரியர் கேட்கும்போது உதவுவதோடு அடுத்த பாடத்திலும் தொடர்ந்து பயணிக்கக் கை கொடுக்கும். மூளைக்கும் ஓய்வு மிக அவசியம். தேர்வாக இருந்தாலும் உங்கள் மூளையை ஓய்வின்றி பட்டினி போடாதீர்கள்.
    Next Story
    ×