search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
    X

    மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

    மாணவ-மாணவிகளே, நன்றாக படித்து வந்தாலும் சில நேரங்களில் படித்தது மறந்துவிடுகிறது. உங்கள் நினைவுத்திறனை, ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் குறிப்புகளை பார்க்கலாம்.
    மாணவ-மாணவிகளே, ஆண்டு இறுதித்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன. நன்றாக படித்து வந்தாலும் சில நேரங்களில் படித்தது மறந்துவிடுகிறது என்று சிலர் கவலைப்படுவதுண்டு. உங்கள் நினைவுத்திறனை, ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் டிப்ஸ் இதோ....

    தகவல்களில் கவனம் தேவை: எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் கவனமாக, கருத்துடன், மனதை ஒருமுகப்படுத்தி படித்தால் அது நினைவில் பதிந்துவிடும். எனவே பாடங்களை படிக்கும்போது கருத்துடன் படிக்க வேண்டும். அலைபாயும் மனதுடன் படித்தால் படித்தது எதுவும் நினைவில் நிற்காது. எனவே பாடங்களை படிக்கும்போது அதில் அதிக கவனம் தேவை. பாடங்களில் உள்ள தகவல்களை ஒன்றுக்கு பல முறை படித்து நினைவில் பதிவு செய்ய வேண்டும். படித்ததை மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பதன் மூலம் மனதில் பதிந்த தகவல்களை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

    சுருக்கமான வழிமுறைகள்: ஒரு கருத்தை மனதில் பதிவு செய்ய நீங்களே சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். நீங்கள் படிக்கும் பாடத்துக்கு பொருத்தமான நிகழ்வுகள், விஷயங்களை இணைத்து மனதில் பதிவு செய்யலாம். இதனால் ஒரு விஷயத்தை நினைவு படுத்த அது மிகவும் உதவும். உதாரணமாக வரலாற்று பாடத்தில் ஒரு மன்னர் பெயரை நினைவில் வைக்க உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒரு நண்பரின் பெயரை இணைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற சில வழிமுறைகள் மூலம் படிக்கும் பாடத்தை வேறு சில நிகழ்வுகள், பெயர்கள் போன்றவற்றுடன் இணைத்துப்படித்தால், பாடங்கள் மறக்காமல் நினைவில் நிற்கும்.



    தகவல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்: பாடங்களில் உள்ள தகவல்களை வரிசையாக படித்து அவற்றை நினைவில் பதிவு செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுவாரியாக படித்து மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும் என்ன நிகழ்வுகள் நடந்தது என்பதை மனதில் வரிசையாக பதிவு செய்து கொண்டால் எப்படி கேள்வி கேட்டாலும் உங்களால் பதில் சொல்ல முடியும். இதுபோல அறிவியல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களை படிக்கும்போது அவற்றை வரிசையாக படித்து வந்தால் அவை எளிதில் புரியும், ஞாபகத்திலும் பதிவாகும்.

    புதிய தகவல்களை இணைக் கவும்: அறிவியல் தொடர்பான பாடங்களை படிக்கும் போது அதில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தகவல்களை இணைத்துக்கொள்வது அவசியம். எப்போதும் ஏற்கனவே படித்த தகவல்களை மீண்டும் படிக்கும் போது அதில் புதிய தகவல்களை சேர்த்துக்கொள்ளும்போது பழைய தகவல்களை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டு அதனுடன் புதிய தகவல்களை இணைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் அந்த தகவல்கள் கோர்வையாக நினைவுக்கு வரும். கூடுதல் தகவல்களை மட்டும் தனியாக படிக்கக் கூடாது. அதனுடன் தொடர்புள்ள தகவல்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும்.

    இடைவெளி கூடாது: பாடங்களை படிக்கும் போது தொடர்ச்சியாக படிக்க வேண்டும். இன்று ஒரு நாள் படிப்பது இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் படிப்பது என்பது கூடாது. தினமும் தவறாமல் பாடங்களை படிக்க வேண்டும். ஒரு நாள் படிக்க முடியாவிட்டாலும் அன்றைய தினம் பாடப்புத்தகங்களை வாசிக்க தவறக்கூடாது. அதற்கும் முடியவில்லை என்றால் ஏற்கனவே படித்த பாடங்களை மனதில் நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும். மனத்திரையில் பாடங்களை ஓடவிட்டு நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஓய்வு அவசியம்: தேர்வு நேரத்தில் மட்டும் சிலர் விடியவிடிய கண்விழித்துப்படிப்பார்கள். இது தவறு. படிக்கும்போது அளவான ஓய்வு அவசியம். தினமும் பாடங்களை படிக்கும் போது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சிறிய இடைவெளி அவசியம். அந்த இடைவெளி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்கலாம். அந்த ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். அப்போது டி.வி. பார்ப்பது கூடாது. வீட்டுக்குள் நடப்பதன் மூலம் உடலில் சுறுசுறுப்பை அதிகரிக்கலாம். அல்லது வீட்டில் இருந்து சிறிது தூரம் காலாற நடந்துவிட்டு வரலாம். அல்லது கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்தி ஓய்வு எடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது தூங்கிவிடக்கூடாது. தேர்வு நேரத்தில் நீண்ட நேரம் கண்விழித்துப்படித்தால் அதன் மூலம் மூளை சோர்வடையும் நிலை உள்ளது. இதனால் படித்தது மறந்துவிடும். தேர்வுக்கூடத்தில் தேர்வு எழுதும்போது உறக்கம் தான் வருமே தவிர, படித்தது நினைவுக்கு வராது. எனவே முறையான, அளவான ஓய்வு எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது.
    Next Story
    ×