search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மழை நேரத்தில் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
    X

    மழை நேரத்தில் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

    மழை காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    நாட்டில் மழை பெய்தால் செழிப்பு, பசுமை ஏற்படும். மழை பெய்யா விட்டால் மனிதர்கள் மட்டு மல்ல வன உயிரினங்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். மழை பெய்யாவிட்டால் வறட்சி, உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு விடும். அதோடு சமூக அமைதியும் சீர்கெட்டு விடும். எனவே தான் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை, அணை, தடுப்பணை, கால்வாய் என்று பல்வேறு விதமான நீர் நிலைகளை ஏற்படுத்தினர்.

    தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த காலத்தில் மழைநீரை சேமிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதே வேளையில் மழை காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழை காலத்தில் நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    மழை காலங்களில் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களும் வழி காட்டுதல்களை செய்யவேண்டும். பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு திரும்ப வரும் போதும் மழையில் நனையாமல் இருக்க உரிய முன்எச்சரிக் கையுடன் செல்ல வேண்டும். மழை பெய்யும் போது மைதானம் மற்றும் மரத்தடியில் நிற்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் பள்ளிக்கு வாகனங்களில் செல்லும் போது தண்ணீர் தேங்கும் இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களும் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும். கால நிலை மாறும் போது மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அது போன்ற உடல்நலக்குறைவு ஏதும் ஏற்பட்டால் மாணவர்கள் உடனடி யாக பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண் டும். உடல்நலம் நன்றாக இருந்தால் தான் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

    மழை பெய்யும் போது முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியே மழை குறித்து மாணவர்களிடம் பயத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. மழை பெய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்த வகையில் மழைநீரை சேமிப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    மழை பெய்வதற்கு மரங்கள் எந்த அளவிற்கு அவசியம் என்று கூறி மாணவர்களை மரம் வளர்ப்பில் ஈடுபடுத்த வேண்டும். இயற்கை சூழல் குறித்த ஆர்வத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் இயற்கை பேரி டரை சந்திக்கும் யுக்திகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த கல்வி என்பது செயல்முறையில் கற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும். அப்போது தான் பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் பயன் அளிக்கும். உண்மையில் இடி, மின்னல், காற்று என்று வரும் போது மாணவர்கள் பதற்றம் அடையக் கூடாது. அதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ளவும், அறிவியல் காரணங்களையும் புரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்க வேண்டும்.
    Next Story
    ×