search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளும்.. பண்பாடும்..
    X

    குழந்தைகளும்.. பண்பாடும்..

    குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடு, பெரியவர்களிடம் மரியாதை இதெல்லாம் கற்றுத்தர வேண்டிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.
    குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடு, பெரியவர்களிடம் மரியாதை இதெல்லாம் முக்கியமானது. அவர்கள் வளரும்போதே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட வேண்டும்.

    பிறருக்கு உதவுவது :

    தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி தேவைப்படும் போது அந்த நேரம் தன்னால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று குழந்தைகளிடம் வலியுறுத்துங்கள். உதவும் மனப்பான்மை சிறு வயதிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். தன்னோடு படிப்பவர்களுக்கு தேவைப்பட்டால் பேனா, பென்சிலை கொடுத்து உதவுவது போன்ற சிறுசிறு விஷயங்கள் அவர்களை பண்படுத்தும். மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

    அன்பு, அனுசரணை என்பது சொந்த குடும்பத்தில் கூட பார்ப்பது அரிதாகிவிட்டது. யாருக்காகவும் சிறிது சிரமப்பட கூட யாரும் தயாராக இல்லை. சுயநலமே மக்கள் மனதில் பரவலாக காணப்படுகிறது. நாளடைவில் இது அவர்களை ஒரு தனிமை இருளில் தள்ளிவிடும். முன்பின் தெரியாதவராக இருந்தாலும், அவசர காலத்தில் நாம் செய்யும் உதவி, ஆயுள் வரை அவர்களை நினைத்துப் பார்க்க வைக்கும். இந்த உண்மை அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே உணர்த்தப்பட வேண்டும்.

    மரியாதை :

    தன்னைவிட பெரியவர்களை மதிக்க கற்றுத்தர வேண்டும். தன்னைவிட சிறியவர்களை நேசிக்க கற்றுத்தர வேண்டும். மரியாதை என்பது ஒருவரை நம்மை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது. சமூகத்தில் நாம் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் முதலில் மற்றவரை மதிக்கவேண்டும். குழந்தையின் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்துத்தான் மற்றவர்கள் பெற்றோரை எடை போடுவார்கள்.

    நல்ல வார்த்தைகள் :

    எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசிப் பழக வேண்டும். குழந்தைகள் முன்னால் பெற்றோர் பேசும் வார்த்தைகள் அவர்கள் மனதில் பதிவாகி விடும். அதனால் அவர்கள் எதை பேச வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் பெற்றோர், குழந்தைகள் முன்னால் பேச வேண்டும்.

    நம் மொழியை நாமே கேவலப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசக்கூடாது. வளரும் குழந்தைகளுக்கு நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்கத் தெரியாது. நல்ல வார்த்தைகளை கற்றுத் தருவது என்பது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். அவர்கள் பேசும் வார்த்தைகள் திரை மறைவில் நம்முடைய சுயரூபத்தை வெளிச்சம்போட்டு காட்டும் விதமாக இருக்கக்கூடாது.

    பொய் பேசக்கூடாது :

    பல வீடுகளில் பொய்பேச பெற்றோர்களே கற்றுக்கொடுக்கிறார்கள். வீட்டில் இருந்துகொண்டே நான் இல்லை என்று சொல் என்கிறார்கள். அந்தப் பொய்யின் பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. அதே மாதிரியான பொய்யை குழந்தை சொல்லும்போது ஒழுக்கக் கேடாக நினைக்கிறோம்.

    ஆனால் இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தால் பெற்றோர்கள் தான் குற்றவாளியாவார்கள். இந்தப் பொய் தொடர்ந்து பள்ளியிலும் வெளிப்படும். வீட்டுப் பாடம் ஏன் செய்யவில்லை? ஏன் காலதாமதம்? பெற்றோர் கையெழுத்து ஏன் வாங்கி வரவில்லை? என்ற பல கேள்விகளுக்கு பொய்யே பதிலாக இருக்கும். அதனால் பொய் சொல்லுவதால் ஏற்படும் விபரீதங்களை எடுத்து சொல்லி, உண்மை பேசுவதால் ஏற்படும் மரியாதையையும் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை நேர்மையாக வழிநடத்த வேண்டும்.

    பகிர்ந்து கொள்ளுதல் :

    இந்த பண்பு சிறுவயது முதலே வளர்க்கப்பட வேண்டும். குடும்பத்திலும், சமூகத்திலும் இந்த உயர்ந்த பண்பு போற்றுதலுக்குரியது. குழந்தைகள் தான் சாப்பிடும் பொருளை, விளையாட்டுப் பொருளை, உடைமைகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பத்தில் தயங்கும். பெற்றோர்கள் பக்குவமாக சொல்லிக் கொடுத்தால், அவர்கள் மனதில் மாற்றம் உருவாகும். சுயநலக் கூட்டிலிருந்து வெளியே வந்தால் பகிர்ந்து கொண்டு வளரமுடியும். பகிர்ந்துகொள்ளும் மனம் கொண்டவர்கள் தான் சமூகத்தால் நேசிக்கப்படும் மனிதர்களாக இருப்பார்கள். சமூகம் அவர்களைத் தான் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும்.

    சகிப்புத் தன்மை :

    நமக்கு பிடிக்காத செயல் களை மற்றவர்கள் செய்யும்போது அதை சகித் துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். தனக்கு பிடிக்காத ஒன்றை அடுத்தவர் சாப்பிடும்போது அதைப்பற்றி விமர்சனம் செய்யக்கூடாது. அடுத்தவர் செய்கை, மொழி, வாழ்க்கை முறை, பழக்க வழக்கம், இது எதையுமே தவறாக விமர்சனம் செய்து மற்றவர் வெறுப்பை சம்பாதிக்கக்கூடாது. பள்ளிப் பருவத்தில் இந்த பக்குவம் வராவிட்டால் நாளை சமூகத்தில் சாதி, மதம், மொழி, ஆன்மிகம், கலாசாரம் என்று பல விஷயங்களில் குழந்தைக்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விடும். அதனால் இளம் பருவத்திலேயே சகிப்பு தன்மையை கற்றுத்தர வேண்டும். இது ஒரு பெரிய ஆன்ம பலம்.

    ஒருமைப்பாடு :

    ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் வளர்க்கவேண்டிய முக்கிய விஷயம் ஒருமைப்பாடு. நம் இந்திய விழாக்கள், பண்டிகைகள் அனைத்தும் இந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. நண்பர்கள், உறவினர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது, பரிசுகள் வழங்குவது, கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்விப்பது அனைத்தும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. சிறு வயதிலிருந்தே குழந்தைகள் இந்த கலாசாரங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களை பண்புள்ள நல்ல பிரஜைகளாக மாற்றும்.
    Next Story
    ×