search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.
    X
    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.

    வேலூரில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்

    வேலூரில் ஒரே இடத்தில் 108 திவ்யதேசங்களையும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுபகவான் இப்பூவுலகை காக்கும்பொருட்டு எங்கெங்கு அதர்மம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் தன் அவதாரங்கள் மூலம் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி அங்கேயே குடிகொண்டவராவார். அவர் குடிகொண்ட திருக்கோவில்கள் பாரததேசத்தில் ஏராளமாக உள்ளன.

    இவை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, ஆக்ரா, மதுரா, பத்ரிநாத் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் நேபாளம் என மொத்தம் 108 திவ்ய தேசங்கள் உள்ளன. திவ்யதேசம் என்பது வைணவத்தலங்களை குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்பு மிக்க வைணவத்தலங்கள் திவ்யதேசம் என அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    இந்த 108 திவ்யதேசங்களும் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது சோழநாட்டு திருப்பதிகள்-40, தொண்டைநாட்டு திருப்பதிகள்-22, நடுநாட்டு திருப்பதிகள்-2, பாண்டியநாட்டு திருப்பதிகள்-18, மலைநாட்டு திருப்பதிகள்-13, வடநாட்டு திருப்பதிகள்-11, நிலஉலகில் காணமுடியாத திருப்பதிகள்-2 ஆகும்.


    உற்சவர்கள் நேபாளம் மூர்த்தி பெருமாள், மதுரா கோவர்த்தனேசன், ஆயர்பாடி நவமோகன கிருஷ்ணன்.

    இவைகளில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 கேரளாவிலும், 2 ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரபிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தரகாண்டிலும், ஒன்று குஜராத்திலும், ஒன்று நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் வானுலகிலும் (திருப்பாற்கடல், திருப்பரமபதம்) உள்ளன.

    இந்த 108 திவ்யதேசங்களில் 106 திவ்ய தேசங்களைதான் நாம் பார்த்து தரிசிக்கமுடியும். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு கோலத்தில் பெருமாளை காணமுடியும். இவை அனைத்தையும் நேரில் தரிசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமா என்றால் ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும். செலவுசெய்துகூட சென்று பார்க்கமுடியாத 108 திவ்ய தேசத்தையும் ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு வேலூரில் கிடைத்துள்ளது.


    தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள உறையூர் அழகிய மணவாளபெருமாள், திருக்கூடலூர் வையல் காத்தபெருமாள், திருக்கோவிலூர் திரிவிக்ரமன், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய உற்சவர்களை படத்தில் காணலாம்.


    வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள ராணிமஹாலில் 108 திவ்யதேசங்களையும் தரிசனம்செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு முதல் திவ்யதேசமான பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் முதல் வானுலகில் உள்ள 2 தலங்களையும் தரிசிக்கலாம். கடந்த 30-ந் தேதி தொடங்கிய இந்த தரிசனம் வருகிற 15-ந் தேதிவரை நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசனம் செய்யலாம்.

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் வேலூர் உள்பட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் உள்ளவர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் இறைச்சி சாப்பிடமாட்டார்கள். புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் தங்கள் வீடுகளில் படையல் செய்து வழிபடுவார்கள். அப்படிப்பட்ட இந்த புரட்டாசி மாதத்தில் 108 திவ்யதேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த வாய்ப்பு வேலூர் மாவட்ட மக்களுக்கு கிடைத்துள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை 108 திவ்யதேச தரிசன விழாக்குழுவை சேர்ந்த டி.பரசுராம்ராவ், ஆர்.இளங்கோவன், ஆர்.சுரேஷ், ஆர்.சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.
    Next Story
    ×