search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துறவியானால்... தலை முடியையும் துறக்கணுமா?
    X

    துறவியானால்... தலை முடியையும் துறக்கணுமா?

    துறவிகள் தங்கள் தலைமுடியை முற்றிலுமாய் மழித்துக் கொள்கிறார்கள். இதற்கான விளக்கத்தை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    கேள்வி: உங்கள் ஆசிரமத்திலும் சரி, வெளியில் பல இடங்களிலும் சரி, துறவிகள் தங்கள் தலைமுடியை முற்றிலுமாய் மழித்துக் கொள்கிறார்கள். துறவிகளுள் வேறு சிலர், தங்கள் முடியில் கத்தியோ, கத்தரிக்கோலோ படக் கூட அனுமதிப்பதில்லை. இந்த இரு பழக்கமுறைகளும் பெரிதும் வித்தியாசப்படுகிறதே ஏன்?

    சத்குரு: ஒரு மரத்திலோ, செடியிலோ வேண்டாதவற்றை அகற்றி சீர் செய்தோமானால், நாம் வெட்டி சீர்செய்த பகுதியில் மரத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாய் இருக்கும். கவனித்திருக்கிறீர்களா? சீர்செய்த பதினைந்து அல்லது முப்பது நாட்களுக்குள் நாம் சீர்செய்த இடத்தில் தோன்றும் இலைகளின் எண்ணிக்கை, செடியின் பிற பாகத்தில் தோன்றும் இலைகளை விட மிக அதிகமாய் இருக்கும். வெட்டி பதப்படுத்தப்பட்ட இடத்தில் தனது சக்தியை அச்செடி அதிகம் செலுத்துவதே இதற்கு காரணம்.

    உங்கள் உடலிலும் இதுதான் நடக்கிறது. திடீரென்று நீங்கள் தலைமுடியை அகற்றிவிட்டால், உங்கள் சக்தி தலையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்காகத்தான் குறிப்பிட்ட ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தங்கள் தலைமுடியை மழித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் விருப்பம்போல் தலைமுடியை மழித்துக் கொள்வதில்லை. காத்திருந்து, அமாவாசைக்கு முந்தைய தினமான சிவராத்திரி அன்று தங்கள் தலைமுடியை மழித்துக் கொள்வார்கள். இதற்குக் காரணம், அமாவாசை அன்றும் அதற்கு அடுத்த நாளும் இயற்கையிலேயே உங்கள் சக்தியில் ஒரு எழுச்சி இருக்கும். அதை துரிதப்படுத்தும் வகையில் இச்செயலும் அமைகிறது.

    ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால், சிவராத்திரியில் இவர்கள் தங்கள் தலைமுடியை மழித்துக் கொள்கிறார்கள். பொதுவாக, ஆன்மீகப் பயிற்சி ஏதும் செய்யாதவர்களுக்கு, தலையை மழித்துக் கொள்வதில் பெரிதாய் வித்தியாசம் ஒன்றும் நடந்துவிடாது. நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், சாதாரணமாக தங்கள் வாழ்க்கையில் தலைமுடியை மழிக்காத பெண்கள் திடீரென்று மொட்டையடித்துக் கொண்டால், அவர்கள் புத்திசுவாதீனம் இல்லாமல் போய்விடுவதைப் பார்த்திருப்பீர்கள். திடீரென்று தலையை நோக்கி செல்லும் அதிகப்படியான சக்தியை அவர்களால் சமாளிக்க முடியாமல் போவதினாலேயே இதுபோல் நடைபெறுகிறது.



    ஏற்கெனவே, சிறிது சமனற்ற நிலை இருப்பின், இச்செயல் அந்நிலையை அதிகப்படுத்துகிறது. ஆனால், இதுவே அந்த சக்தியோட்டத்தை சரியான முறையில் கையாள உங்களுக்குத் தேவையான ஆன்மீகப் பயிற்சியின் துணை இருந்தால், அந்த சக்தியோட்டத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தன் உள்நலனுக்காக மட்டுமன்றி, தன் முக்திக்கும் ஆசைப்படும் ஒரு ஆன்மீக சாதகர், இயற்கையில் தனக்கு ஏதுவாய் இருக்கும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையுமே பயன்படுத்திக்கொள்ள முனைவார். தலைமுடியை மழிப்பதும், அதில் ஒன்று.

    எப்போது ஒருவருக்கு, அவரின் சக்தியோட்டம் பெருக்கெடுத்து, அது அவரது தலை வழியே வெடித்துக் கிளம்புகிறதோ, எப்போது அவர் தனது தலைக்கு மேலே உள்ள இரு சக்கரங்களையும் அதன் முழுத்திறனில் இயங்கச் செய்துவிட்டாரோ, அதன்பின் அவர் தன் தலைமுடியை மழித்துக் கொள்ளமாட்டார். மாறாக, தனது முடியை எவ்வளவு வளர்க்க முடியுமோ, அவ்வளவு வளர்த்து, அதை தனது தலைக்கு மேலே கவசமாய் முடிந்து வைத்துக் கொள்வார்.

    தேவையான அளவிற்கு முடி இல்லையெனில், துணியைப் பயன்படுத்துவர். தலைக்கு மேலே இருக்கும் இரு சக்கரங்களும் இயங்கத் துவங்கிவிட்டால், அது ஒருவருக்கு மிகப்பெரிய சாத்தியமாய் இருக்கும். ஆனால் அதேநேரத்தில், அது உடலை சற்றே வலுவிழக்கச் செய்யும். மேலிரண்டு சக்கரங்களில் சக்தியோட்டம் அதிகரித்தால், கீழ் இருக்கும் உடலிற்கு சக்தி போதாமல், உடல் இறக்க நேரிடும். இதனால்தான் பல யோகிகள் தங்களது 35 வயதிற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். அவர்களின் சக்திநிலை தேவையான அளவிற்கு உயர்ந்திருந்தாலும், உடலின் செயல்பாடுகள் அவர்களுக்கு முழுவதுமாய் புரிந்திருப்பதில்லை.

    மனித உடல் என்பது மிகமிக நுட்பமான ஒரு எந்திரம். பற்பல பாகங்களை பற்பல விதங்களில் ஒன்றிணைத்து மிக சிக்கலான, அதே நேரத்தில், மிக நுட்பமானதாய் இது சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது. மிக நுட்பமென்பது வெறும் சிக்கலாய் தோன்றுவதனால் மட்டுமல்ல, ஒரு சாதாரண எந்திரத்தை விட பற்பல சாத்தியங்களை கொண்டிருப்பதனாலும்தான். உடலளவில் மிக உறுதியாய்

    இல்லையெனில், சக்தியோட்டம் உயரும்போது, ஒன்று, உடலின் செயல்பாடுகள் குறைந்துவிடும் அல்லது முற்றிலுமாய் நாம் உடலையே இழக்க நேரிடும். இதனால்தான் ஹடயோகம் முக்கியத்துவம் பெறுகிறது. ஹடயோகத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், உடலளவில் ஸ்திரம் ஏற்படும். உடலளவில் சக்தியோட்டம் ஸ்திரமான பின்னரே, உயர்ந்த சாத்தியங்களுக்கு முயற்சி செய்ய வேண்டும்.
    Next Story
    ×