search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்?
    X

    நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்?

    விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும்.

    விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும். இது தவிர, இதை நம் உடலில் வைத்துக் கொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும்.

    யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும்.

    துரதிருஷ்டவசமாக, பல இடங்களில் போலியான விபூதி வியாபாரம் தலைதூக்கிவிட்டது. விபூதியை சரியாகத் தயாரிக்காமல், ஏதோ வெள்ளைக் கல்லை பொடியாக அரைத்து, அதை விபூதி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறார்கள். விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும்.

    அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது. அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும்; தீயவற்றை அல்ல. வாழ்வை நாம் ஏழு பரிமாணங்களில் உணர முடியும்.

    இந்த ஏழு பரிமாணங்களைக் குறிக்கும் விதத்தில் நம் உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. இந்த சக்கரங்கள், நம் சக்தி உடலின் சந்திப்பு மையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவப்பூர்வமாக இந்தச் சக்கரங்களை நாம் உணர முடியுமே தவிர, உடலை இரண்டாக வெட்டி பார்த்தால் இவற்றைப் பார்க்க முடியாது.

    உங்கள் சக்தி மேன்மேலும் தீவிரமாகும் போது, இயற்கையாகவே உங்கள் சக்தி ஒரு சக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். சக்தியின் தீவிரத்தைப் பொறுத்து தான் நாம் வாழ்வை உணரும் விதம் அமைகிறது. உயர்நிலை சக்கரங்கள் வழியே நாம் வாழ்வை உணர்வதற்கும், அடிநிலை சக்கரம் வழியே வாழ்வை உணர்வதற்கும், சூழ்நிலை ஒன்றாகவே இருந்தாலும், நம் அனுபவம் பெரிதும் வித்தியாசப்படும்.
    Next Story
    ×