search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலின் தலவரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பக் கூடத்தை படத்தில் காணலாம்.
    X
    ராமேசுவரம் கோவிலின் தலவரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பக் கூடத்தை படத்தில் காணலாம்.

    ராமேசுவரம் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் “ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா”

    ராமேசுவரம் கோவிலில் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆகம விதிப்படி 10 நாட்கள் நடக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ராமேசுவரம் ராமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 13-ம் நூற்றாண்டு முதல் ராமலிங்க பிரதிஷ்டை பிரம்மோற்சவம் என்ற பெயரில் 10 நாட்கள் நடைபெற்றுள்ளது. அதாவது ராமர், சிவலிங்கத்தை நிறுவி வணங்கியதை நினைவுகூர்ந்து இந்தத்திருவிழா நடத்தப்படுகிறது.

    ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, சில காரணங்களால் ராமேசுவரம் கோவிலில் 3 நாட்கள் மட்டுமே இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ராமேசுவரம் விசுவஹிந்து பரிஷத்தின் கோவில், மடங்களின் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாளர் பட்சி சிவராஜன், இந்து அறநிலையத்துறை விசாரணையின் பிரிவில் ஒரு மனு கொடுத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-



    ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 13-ம் நூற்றாண்டில் இருந்தே, ராமலிங்க பிரதிஷ்டை பிரம்மோற்சவம் என்ற பெயரில் 10 நாட்கள் நடத்தப்பட்டது. விழாவில் ராமரின் பிறப்பு, ஜடாயுமுக்தி, விபீஷணர் சரணாகதி, ராமர்-சீதா பட்டாபிஷேகம் எனத் திருவிழா நிறைவு பெறும். இவ்வாறு 10 நாட்களாக நடைபெற்ற திருவிழா, தற்போது ஆகம விதிமுறைகளை மீறி 3 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்து அறநிலையத்துறை விசாரணை பிரிவில் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு மனு கொடுத்தேன். அதன் மீதான விசாரணையின்படி அமைக்கப்பட்ட, விசாரணைக் குழு ராமேசுவரம் கோவிலில் 10 நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை நடத்த வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு அறிவித்தது. ஆனால் ராமேசுவரம் கோவிலில் தற்போது வரை இந்த திருவிழா 3 நாட்கள் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களை போலவே, இந்த ஆண்டும் 3 நாட்கள் மட்டும் திருவிழா நடத்த திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே இது குறித்து உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப, உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்தநிலையில் ராமேசுவரம் கோவில் நிர்வாகம் சார்பில் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை ராவண சம்ஹாரமும், மறுநாள் கோதண்ட ராமர் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேகமும், 4-ந்தேதி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டையும் நடைபெறுவதுடன் திருவிழா நிறைவு பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆகம விதிமுறைகள்படி ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 10 நாட்கள் நடக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×