search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெக்காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி வேடமணிந்தபடியும், தீச்சட்டி ஏந்தியபடி வந்த காட்சி.
    X
    வெக்காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி வேடமணிந்தபடியும், தீச்சட்டி ஏந்தியபடி வந்த காட்சி.

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த திரளான பக்தர்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது.



    அப்போது வீடுகள் மற்றும் கடைகள் முன் நின்றிருந்த பொதுமக்கள் ஓம் காளி, ஜெய் காளி, தாயே வெக்காளியம்மா என கோஷம் எழுப்பினார்கள். தேங்காய், பழம் படைத்து வழிபாடு செய்தனர். பகல் 12 மணி அளவில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் கே.என். நேரு எம்.எல்.ஏ, திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி நகரின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அணி அணியாக பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்தினால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நேற்று மாலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அதிகாரி ஜெயப்பிரியா தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×