search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேரை பக்தர்கள் சுமந்து வந்த காட்சி.
    X
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேரை பக்தர்கள் சுமந்து வந்த காட்சி.

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மதுரைகாளியம்மன் கோவில் தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருச்சிமாவட்டம் தொட்டியத்தில் மதுரைகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனித்தேர்த்திருவிழா ஒரு வார காலம் நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 21-ந் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இளநீர்களை கொண்டு இளநீர்காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

    கடந்த 28-ந்தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோவில் வளாகத்தில்் சின்னத்தேர், பெரியத்தேர் தலையலங்காரம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் ஓலைப்பிடாரிஅம்மனும், சின்னத்தேரில் மதுரைகாளியம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்தூக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து கோட்டைமேடு சந்தைபேட்டை வழியாக பெரியதேர் மற்றும் சின்னத்தேர் ஆகிய இரண்டு தேர்களையும் பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். நேற்று மாலை எல்லை உடைக்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகள் வழியே சென்றது. தொடர்ந்து அழகு நாச்சியம்மன் கோவில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சி, எல்லை முகம் பார்க்கும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, எருமைக்கிடா வெட்டு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் வருகிற செவ்வாய்க்கிழமை வரை இத்தேர்த்திருவிழா நடக்கிறது.

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொட்டியத்தை சுற்றியுள்ள 18 பட்டியில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×