search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடங்குகிறது

    விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொளஞ்சியப்பர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கொளஞ்சியப்பரின் வலது பக்கத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் சித்தி விநாயகர், பெரிய திருமேணி கொண்டு காட்சியளிக்கிறார். கொளஞ்சியப்பர், சித்தி விநாயகருக்கு எதிரே, வேட்டைக்கு தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட 2 பெரிய குதிரைகள் நிற்கின்றன.

    கோவிலின் பின்பக்கம் இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த தளத்தில் அமைந்துள்ள முனியப்பர் சன்னதியில் பக்தர்கள் தாங்கள் கோரிக்கைகளை ஒரு மனுவாக எழுதி பிராது கட்டினால் 90 நாட்களில் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து பக்தர்கள் கொளஞ்சியப்பரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம், ஆடி கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, மாதந்தோறும் வரும் கிருத்திகை தினங்கள், வருடபிறப்பு தினங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.



    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கொளஞ்சியப்பர் கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்க இருக்கிறது. வருகிற 8-ந் தேதி காலை 4.30 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்க இருக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரம் 9-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை உற்சவ மூர்த்திகள் காவடிகளுடன் வீதிஉலாவாக கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து கொளஞ்சியப்பருக்கும், சித்தி விநாயகருக்கும் பால் அபிஷேகம் நடக்கிறது.

    இதை தொடர்ந்து மாலையில் சுவாமிக்கு தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கருணாகரன், கோவில் மேலாளர் குருநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×