search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனூர் அம்மன் கோவில் தேரோட்டம் 29-ந்தேதி நடைபெறுகிறது
    X

    ஆனூர் அம்மன் கோவில் தேரோட்டம் 29-ந்தேதி நடைபெறுகிறது

    காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர் அருகே உள்ள கஸ்பா பழையகோட்டை ஸ்ரீ ஆனூர் அம்மன் கோவில் தேரோட்டம் 29-ந்தேதி நடைபெறுகிறது.
    காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர் அருகே உள்ள கஸ்பா பழையகோட்டையில் புகழ் பெற்ற ஸ்ரீ ஆனூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கு பழையகோட்டை பட்டக்காரர் ராஜ்குமார்மன்றாடியார் தலைமை தாங்குகிறார். சிவ்பார்வதிமன்றாடியார் கல்விக்குழுமங்களின் செயலாளர் எஸ்.நவீன்மன்றாடியார், மகேன்மன்றாடியார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    விழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.35 மணிக்கு தீர்த்தக்காவடி பக்தர்கள் கோவிலிலிருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தம் முத்தரித்து எடுத்து கொண்டு மாலை 6 மணிக்கு பழையகோட்டை பொய்யேரி காவடி பந்தலை வந்தடைகின்றனர். பின்னர் இரவு கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு கிராம சாந்தி பூஜை நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு தீர்த்தக்காவடி பக்தர்கள் பொய்யேரி பந்தலில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவிலை வந்தடைகின்றனர். தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு ஆனூர் அம்மன் தாயார் அத்தனூர் அம்மனை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29-ந் தேதி காலை 6 மணிக்கு ஆனூர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 6.45 மணிக்கு திருத்தேர் நிலை பெயர்தல் நடைபெறுகிறது. பின்னர் காலை 7.20 மணிக்கு ஆனூர் அம்மனுக்கு தீர்த்தக்காவடி பக்தர்களின் காவிரி தீர்த்த அபிஷேகம் நடத்தப்பட்டு சர்க்கரை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    காலை 8.30 மணிக்கு ஆனூர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் திருமஞ்சனம், மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புதிய பட்டாடை உடுத்தப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் காலை 9 மணிக்கு காங்கேயம் வட்டமலை சேடம்புதூர் தேவாங்கசெட்டியார் சமூகத்தினரின் கத்தி சேர்வை நிகழ்ச்சியும், பரிவட்டம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு கோவிலை சுற்றி வந்து நிலை சேர்க்கப்படுகிறது.

    மேலும் வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மற்றும் காளைச்சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இரவு 7 மணிக்கு காவடி கோவில் வீடு வந்தடைதலுடன் விழா நிறைவடைகிறது. விழாவில் பயிரன்குல மக்கள், பக்தர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×