search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் அக்னிச்சட்டி, தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.
    X
    பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் அக்னிச்சட்டி, தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.

    பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னிச்சட்டி- தீர்த்தம் எடுத்து பெண்கள் ஊர்வலம்

    பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், தீர்த்தக்குடம் எடுத்தும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
    ஈரோடு பிரப்ரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க் கால் (நடு) மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி 3 கோவில்கள் முன்பும் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பங்களுக்கு பெண்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், தீர்த்தக்குடம் எடுத்தும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். ஒருசில பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.



    இன்று (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு கிராமசாந்தியும், நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது. 28-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், மாவிளக்கு பூஜையும், பெரிய மாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    29-ந்தேதி (புதன்கிழமை) பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது. 30-ந்தேதி (வியாழக்கிழமை) பெரிய மாரியம்மன், 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறுபூஜை நடக்கிறது.
    Next Story
    ×