search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுக்கும் அண்ணாமலையார்
    X

    ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுக்கும் அண்ணாமலையார்

    மனிதர்களைப் போலவே திருவண்ணாமலை அண்ணாமலையாரும் ஆண்டுக்கு ஒரு தடவை வெளியில் வந்து திதி கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார்.
    நாமெல்லாம் நமது மறைந்த முன்னோர்களுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுப்போம். பித்ருக்களின் தாகத்தைத் தணிக்க எள்ளும் தண்ணீரும் அளிப்போம். மனிதர்களைப் போலவே திருவண்ணாமலை அண்ணாமலையாரும் ஆண்டுக்கு ஒரு தடவை வெளியில் வந்து திதி கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

    திருவண்ணாமலையை ஆட்சி செய்து வந்த வல்லாள மகராஜாவுக்குத்தான் அண்ணாமலையார் திதி கொடுக்கிறார். வல்லாள மகாராஜா மிகவும் நேர்மையானவர்.
    அக்னி வம்சத்தில் உதித்த அவர் தினமும் ஈசனுக்கு பூஜைகள் செய்து தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். திருவண்ணாமலை ஆலயத்தில் அவர் செய்த திருப்பணிகள் ஏராளம்.

    நாட்டை சுபீட்சமாக்கி ஆண்டு வந்த அவருக்கு எல்லா செல்வங்களும் இருந்த போதிலும், கொஞ்சி மகிழ குழந்தை செல்வம் இல்லாதது மிகப் பெரும் குறையாக இருந்தது. இதனால் அவர் ஏக்கத்தோடு காலம் கழித்து வந்தார்.



    அவரது வாட்டத்தை உணர்ந்த அண்ணாமலையார், ‘‘கவலைப்படாதீர். உமக்கு மகனாக நானே இருப்பேன். நாங்கள் உமக்கு ஆண்டுக்கு ஆண்டு திதி கொடுப்போம்’’ என்றார்.

    அண்ணாமலையார் அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அண்ணாமலையாரை ஆலயத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்று திதி கொடுக்க வைக்கிறார்கள். இதற்காக அண்ணாமலையார், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பந்தனூருக்கு புறப்பட்டுச் செல்வார்.

    அங்கு வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். இதையடுத்து அந்த ஊர் மக்கள் சம்பந்தம் கட்டுவார்கள். இதைப் பிரதிபலிக்கும் வகையில்தான் அந்த ஊருக்கே சம்பந்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆண்டுக்கு ஒருதடவை அண்ணாமலையாரே தம் ஊருக்கு வருவதால் சம்பந்தனூர் மக்கள் அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்து அவரை வழிபடுவார்கள். தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான சிவாலயங்கள் உள்ளன. ஆனால் எந்த ஒரு ஆலயத்திலும் ஈசனே மனிதரை தந்தையாக ஏற்றுக் கொண்டு, அவருக்கு திதி கொடுக்கும் வழக்கம் இல்லை. திருவண்ணாமலை தலத்தில் மட்டுமே இந்த அதிசயம் நடக்கிறது.

    Next Story
    ×