search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்
    X

    திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்

    திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் அட்சதை தூவி தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டிற்கான பங்குனிபெருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் காலையில் ஓரு வாகனத்திலும் இரவில் வெவ்வேறு வாகனத்திலுமாக தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவிழாவின் விசே‌ஷ நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு புத்தம் புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டது.

    மேலும் தங்கம் பவளம் வைடூரியம் போன்ற நகை அணிகலன்களும் வாசனை கமழும் வண்ண மலர்களாலும் மணக்கோலஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு பசுமலை மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார்.



    இதே வேளையில் மதுரையிலிருந்து மீனாட்சியம்மனும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் வந்தனர். சந்திப்புமண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து சுவாமிகள் புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள ஓடுக்க மண்டபத்திற்கு சென்றனர் அங்கு கன்னி ஊஞ்சல் நடந்தது. இந்த நிலையில் கோவிலுக்குள் உள்ள மணமேடையான ஆறுகால் பீடத்திற்கு மீனாட்சியம்மன் வந்தார். அதன் பிறகு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். இதற்கிடையே தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி மணமேடைக்கு வந்தார் அங்கு சடங்கு மற்றும் சகல சம்பிரதாயங்கள் நடந்தது.

    பகல் 12.30 மணிக்கு நாதஸ்வரம் ஓலிக்க கெட்டி மேளம் முழங்க மாங்கல்யபூஜையுடன் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் அட்சதை தூவி அரோகரா கோ‌ஷம் எழுப்பி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடக்கிறது.
    Next Story
    ×